தமிழ்நாடு

400 முறை தோப்புக்கரணம்... ஆசிரியைக்கு 2 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணையம்!

வீட்டுப்பாடம் செய்து வராததால் 400 முறை தோப்புக்கரணம் போடச் செய்த அரசுப்பள்ளி ஆசிரியைக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 400 முறை தோப்புக்கரணம்... ஆசிரியைக்கு 2 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணையம்!
ஆசிரியைக்கு 2 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணையம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா எஸ்.எஸ்.கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு மாணவி, வீட்டுப்பாடம் செய்து வராததால், 400 முறை தோப்புக்கரணம் போட வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றதாகவும், மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்ட ஆசிரியை சித்ரா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் தாய் பாண்டிசெல்வி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனுதாக்கல் செய்தார்.

கடந்த 2017ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், ஆசிரியை சித்ரா தரப்பு விளக்கமளிக்க வாய்ப்பளித்தும் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், ஆணையம் வசம் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் ஆசிரியை சித்ரா மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெளிவாவதாகக் கூறி, மனுதாரர் பாண்டிசெல்விக்கு 2 லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இந்த தொகையை ஆசிரியை சித்ராவிடம் இருந்து வசூலிக்கவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கூடங்களில், மாணவர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்ளும் இதுபோன்ற ஆசிரியர்களுக்கு இந்த தண்டணை ஒரு பாடமாக அமையும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடரா வண்ணம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.