மகன் மீது போலீஸார் கஞ்சா வழக்குப்பதிவு செய்ததால், போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த தந்தை போலீஸ் நிலைய வாசலிலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதுதான் கோவை பகீர்!
காவல் நிலையம் முன் கதறக் கதற தீக்குளித்து இறப்பது தமிழகத்தில் வாடிக்கையாகிவிட்டது. சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் இரும்பு பட்டறை நடத்தி வந்தவர் ராஜன். ஒரு தகராறில் நண்பர்கள் தன்னைத் தாக்கியதாக கடந்த ஜனவரி 20ம் தேதியன்று ஆர்.கே.நகர் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றார். ஆனால், போலீஸார் தனது புகாரை வாங்க மறுத்ததாகவும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டியதுடன், திடீரென ஸ்டேஷன் முன்பே தீக்குளித்து இறந்தார்.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், கோவையில் சேகர் என்பவர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்து இறந்திருக்கிறார். கோவை சிட்டி லிமிட்டில் இருக்கும் கவுண்டம்பாளையம், கஞ்சா விற்பனைக்கு பெயர் போனது. கஞ்சா விற்பனையால் வசதியாக செட்டிலானவர்கள் இப்பகுதியில் ஏராளம். எத்தனையோ கெடுபிடியான காவல்துறை அதிகாரிகள் வந்த பின்னும் இப்பகுதியில் கஞ்சா ஓட்டத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
இந்தநிலையில்தான் கஞ்சாவை மையப்படுத்தி பகீர் சம்பவம் ஒன்று அந்த ஸ்டேஷன் வாசலிலேயே நிகழ்ந்துள்ளது. கவுண்டம்பாளையம் சிவா நகரைச் சேர்ந்தவர் மணிபாரத். 19 வயது இளைஞரான இவர் மீது அடிதடி உள்ளிட்ட சில வழக்குகள் உள்ளன. இந்நிலையில் மணிபாரத் மற்றும் அவரின் நண்பர் ஜானகிராமன் ஆகியோரை கடந்த ஜனவரி 31ம் தேதியன்று கஞ்சா விற்ற வழக்கில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, மணிபாரத்தின் தந்தையான ஆட்டோ டிரைவர் சேகர், கவுண்டம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து 'என் மகன் மேல பொய்யா கஞ்சா கேஸ் போட்ருக்கீங்க' என பிரச்னை செய்ய, போலீஸார் அதை மறுத்துப் பேசியுள்ளனர். இந்த நிலையில் சட்டென்று ஸ்டேஷனுக்கு முன் நின்று கோஷமிட்டபடி தன் உடம்பில் தீ வைத்துக் கொண்டார் சேகர். உடல் முழுக்க கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த பிப்ரவரி 1ம் தேதி நள்ளிரவில் இறந்தார்.
’போலீஸார் துன்புறுத்தியதால்தான் சேகர் தற்கொலை செய்து கொண்டார்' என அப்பகுதியில் பரபரப்பு கிளம்பிய நிலையில் கவுண்டம்பாளையம் ஸ்டேஷன் போலீஸாரோ, 'அந்தப் பையன் மணிபாரத் மேல ஏற்கெனவே கஞ்சா, அடிதடி திருட்டுன்னு நிறைய கேஸ் இருக்கு. அன்னைக்கு அன்னை இந்திரா நகர் பொதுக்கழிப்பிடம் பகுதியில் கஞ்சா வித்துட்டு இருந்தப்போ, பொட்டலத்தோடு அவனை கைது பண்ணினோம். இதனால், அவங்கப்பா சேகர் ஸ்டேஷனுக்கு வந்தார். கொஞ்ச நேரத்துல திடீர்னு தன் மேலயே மண்ணெண்ணெய் ஊத்தி தீ வெச்சுக்கிட்டார். மகன் வழக்கு பத்தி எங்ககிட்ட அவர் எந்த விளக்கமும் கேக்கல. இப்படி நடந்துக்கிட்டா நாங்க என்ன பண்றது? இந்த சேகரே ஒரு கொலை வழக்கில் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவர்தான்" என்றார்கள்.