அரசியல்

'மீசை' சவாலால் சூடுபிடிக்கும் உள்ளாட்சி அரசியல்... கோவையில் TVK vs DMK!

By Sumalekha
07 Jul 2026, 09:00 PM
ஆர்.எஸ்.பாரதியின் 'மீசை' சவாலை மையமாக வைத்து, கோவை உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து த.வெ.க.வும், தி.மு.க.வும் தீவிர அரசியல் களமிறங்கியுள்ளன.
"உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் பதவியை த.வெ.க. ஜெயித்தாலும் என் ஒரு பக்கத்து மீசையை எடுத்துக்குறேன்” -தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இப்படி விடுத்துள்ள சவாலை செம சின்சியராக எடுத்துக்கொண்டு புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கோவை த.வெ.க. களமிறங்கியுள்ளது. அதற்குப் பதிலடியாக தி.மு.க.வும் மீசை முறுக்க, ரேஸ் இப்பவே டாப் கியரில்!

சென்னை மேயர் பிரியா ராஜனுக்கும், த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவிக்கும் இடையே குத்துவிளக்கேற்றும் சம்பவத்தில் உரசல் ஏற்பட்டது தொடர்பாக ஆர்.கே.நகர் பொதுக்கூட்டத்தில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, 'உதயநிதிக்கு ஒரு சவால்விடுகிறேன். இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. 75 வருட தி.மு.க. என பெருமை பேசும் நீங்கள் தைரியம் இருந்தால் தமிழகத்தில் ஒரேயொரு மேயர் பதவியையாவது ஜெயித்துக் காட்டுங்கள்' என்று ஆவேசமாக பேசியிருந்தார். இதற்கு பதிலடி தந்த தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 'எங்கள் தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி பற்றிப் பேசுவதற்கு ஆதவ் அர்ஜூனாவுக்கு எந்த தகுதியும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் பதவியை த.வெ.க. ஜெயித்தாலும் என் ஒரு பக்கத்து மீசையை எடுத்துக் கொள்கிறேன்' என்று பதில் சவால் விடுத்தார்.

இந்த சவாலை இரு கட்சிகளும் சீரியஸாக எடுத்துக் கொண்டாலும், குறிப்பாக கோவை தவெ.க 'இந்த சவாலில் வென்று, ஆர்.எஸ்.பாரதியின் ஒரு பக்க மீசையை எடுக்கவைக்கும் சம்பவத்தை நாங்கள் செய்கிறோம்' என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளது. இப்படி கோவை மாவட்டத்தில் இரு தரப்புகளும் கோதாவில் குதித்துள்ளதில் சாமர்த்தியமான உள் அரசியல் இருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அது என்னவென்று அவர்களிடம் பேசினோம்..

"த.வெ.க. தலைவர் விஜய்க்கும், ஆதவ் அர்ஜுனாவுக்கும் ஒட்டுமொத்த தி.மு.க.வுமே ஆகாது என்றாலும் மிகக் குறிப்பாக சிலர் மீது கடும் வெறுப்பில் உள்ளனர். அதில் முக்கியமானவர் செந்தில்பாலாஜி. அதற்கு முக்கிய காரணம் கரூர் துயரச் சம்பவம். தேர்தல் பிரசாரத்தில் வேறு எந்த குறிப்பிட்ட அமைச்சர் மீதும் தனிப்பட்ட தாக்குதல் நடத்தாத விஜய், பாலாஜிக்கு எதிராக மட்டும் 'பாட்டிலுக்கு 10 ரூபா' பாட்டைப் பாடி வெறுப்பேற்றினார்.

கரூர் உயிரிழப்புகளுக்கு விஜய் மற்றும் த.வெ.க.வினரின் அலட்சியமே காரணம் என செந்தில்பாலாஜி செய்த பரப்புரையும் விஜய்யை ரொம்பவே உஷ்ணமாக்கியது. அதேபோல் தேர்தலில் வென்ற த.வெ.க., ஆட்சியமைக்க முயன்றபோது அதை தடுக்க இம்முறை அதை ஆண் கோட்டாவுக்கு மாற்றிடச் சொல்லி, அத்துறையின் அமைச்சரான புஸ்ஸி ஆனந்திடம் கேட்டிருக்கின்றனர். அவரும், கோவை மாநகராட்சியில் த.வெ.க. வெற்றிக்காக நீங்க கடுமையாக உழைங்க, உங்களோட கோரிக்கையை நான் பார்த்துக்குறேன்' என்று சொல்லியிருக்கிறார்.

தி.மு.க. தரப்பிலோ, தங்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸைச் சேர்ந்த கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட முனைப்பு காட்டியதில் முக்கியமானவராக செந்தில்பாலாஜி இருந்தார் என்பதும் விஜய்யின் எண்ணம். அதனால்தான் செந்தில்பாலாஜியின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவைக்கு இரண்டு அமைச்சர்களை நியமித்துள்ள விஜய், முன்பு பாலாஜியின் கையில் இருந்த மதுவிலக்கு துறையை கோவையின் விக்னேஷுக்கு ஒதுக்கியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 95 சதவிகித வெற்றியை தி.மு.க.வுக்குப் பெற்றுத் தந்திருக்கும் செந்தில் பாலாஜியை இம்முறை மண்ணைக் கவ்வ வைத்தே தீருவது என்று கங்கணம் கட்டியிருக்கிறது விஜய் தரப்பு. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இரண்டு அமைச்சர்கள், நான்கு எம்.எல்.ஏ.க்களை இப்போதே மாவட்டம் முழுவதும் வார்டு, பஞ்சாயத்து என்று உள் இறங்கி பணிகளைப் பார்க்க வைத்துள்ளனர். அவர்கள் குப்பை முதல் குடிநீர் வரை மக்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் உடனுக்குடன் ஆக்க்ஷன் எடுத்துவருகின்றனர்.

இதற்கு உதாரணமாக, சூலூர் குளக்கரையில் சாலை அமைத்து, தொடர் விளக்குகள் அமைக்க சில கோடிகளை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஒதுக்கியுள்ளார். கோவை த.வெ.க.வில் ஐந்து மாவட்டச் செயலாளர்கள். இதில் சம்பத்குமார், விக்னேஷ் இருவரும் அமைச்சர்களாகிவிட்டனர். மீதியிருக்கும் பாபு, யுவராஜ், ராஜ்குமார் மூவருக்கும் வரும் உள்ளாட்சித் தேர்தல் மூலம் மேயர் பதவியை அடையும் எண்ணம் இருக்கிறது. ஏற்கெனவே, கோவை மேயர் பதவியானது பெண் கோட்டாவில் இருக்க, இளம் வேட்பாளரும், இளைஞர் காங்கிரஸ் தேசிய தேசிய நிர்வாகியுமான ஸ்ரீநிதியை தி.மு.க.விற்குள் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் பாலாஜி.

இந்த நிகழ்வில் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என்று கழக தலைமையே கூடி நின்றது கோவை தி.மு.க.வினரை அதிரவைத்துள்ளது. காரணம், மேயர் தேர்தலில் தி.மு.க.வின் வேட்பாளராக ஸ்ரீநிதிதான் பாலாஜியின் சாய்ஸ் என்றும் சொல்லப்படுகிறது. அதேசமயம், மண்டலப் பொறுப்பாளர் பாலாஜி மற்றும் மூன்று மாவட்டச் செயலாளர்களின் நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகிகள் தலைமையிடம் புகார் சொல்லியிருப்பதால் சற்றே குழப்ப நிலையில்தான் கோவை மாவட்ட தி.மு.க. உள்ளது.

இது நீடித்தால் அது வெற்றிக்கு வேட்டு வைத்துவிடும் என்று, உதயநிதி வாயிலாக கோவை தி.மு.க.வை உசுப்பிவிடும் முயற்சியில் சில சீனியர் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்" என்று சொல்லி முடித்தனர். இதுபற்றி நாம் ஆதவ் அர்ஜூனாவிடம் கேட்டபோது, "மீண்டும் சொல்கிறேன், கோவையில் மட்டுமல்ல. தமிழகம் முழுக்க எங்குமே திமுகவால் ஒரு மேயர் பதவியைக் கூட பிடிக்க முடியாது" என்றார் உறுதியாக.

ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டபோது "விஜய்யின் ஒரு மாத ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது. மக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். என் நம்பிக்கை ஜெயிக்கும். தோல்விக்கு பயந்த ஆதவ் தான் மீசையே வைத்துக்கொள்வதில்லை" என்றார்.

மீசை அரசியல்!