தமிழ்நாடு

Vyasarpadi Murder Case : பூட்டிய வீட்டில் சடலம் 8000 ரூபாய் பஞ்சாயத்து கொலையில் முடிந்த விபரீதம்!

Vyasarpadi Murder Case : பந்தல் போட்ட பணம் 8 ஆயிரம் ரூபாய் கொடுக்காததால், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vyasarpadi Murder Case : பூட்டிய வீட்டில் சடலம்  8000 ரூபாய் பஞ்சாயத்து  கொலையில் முடிந்த விபரீதம்!
கொலைசெய்யப்பட்ட நபர் - அஜித்குமார்

Vyasarpadi Murder Case : சென்னை வியாசர்பாடியில் உள்ள எம்ஜிஆர் நகர் 9வது தெருவைச் சேர்ந்தவர் கிரி. இவரது மனைவியும் மகளும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கிரியை பிரிந்து தனியாக சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. மாற்றுத் திறனாளி கிரியுடன் அவரது 18 வயது மகன் அஜித்குமாரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்றிருந்த கிரி, மீண்டும் வீட்டுக்கு சென்றபோது, அவரது மகன் அஜித்குமார் சடலமாக கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற கொடுங்கையூர் போலீசார், அஜித்குமார் கொலை செய்யப்பட்டது எப்படி என விசாரணை நடத்தினர். அப்போது அஜித்குமாரின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட காயம் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், அஜித்தை கொலை செய்தது, மணலியைச் சேர்ந்த ஜனார்த்தனன், கொடுங்கையூரைச் சேர்ந்த பார்த்திபன் என்பதையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, சில தினங்களுக்கு முன்னர், அஜித்குமாரின் பாட்டி இறந்ததால் வெளியே பந்தல் போடப்பட்டுள்ளது. 

இந்த பந்தலுக்கான பணம் 8 ஆயிரம் ரூபாயை கொடுக்காமல் அஜித்குமார் இழுத்தடித்துள்ளார். இதுகுறித்து ஜனார்த்தனனும், பார்த்திபனும் அஜித்திடம் கேட்டுள்ளனர். அப்போது பணம் எடுத்து வருவதாக கூறி வீட்டிற்குச் சென்ற அஜித், திரும்பி வரவே இல்லை. இதனால், ஜனார்த்தனனும் பார்த்திபனும் அஜித்தின் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அவரோ அங்கு ஹாயாக படுத்து தூங்கியுள்ளார். இதனை பார்த்து ஆத்திரமான அவர்கள், அஜித்தின் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி அருகே பாழடைந்த வீட்டில் பதுங்கியிருந்த ஜனார்த்தனனையும் பார்த்திபனையும் போலீஸார் கைது செய்தனர்.  

பணம் கேட்டபோது, அஜித்குமார் தங்களை தகாத வார்த்தைகளால் பேசியதால் தான், போதையில் அவரை அடித்து உதைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். 8 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம், வடசென்னை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.