GOAT-ல் இடம்பெற்ற அரசியல் குறியீடுகள் என்னென்ன? தெறிக்கவிட்ட தளபதி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தில் இடம்பெற்ற அரசியல் குறியீடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Sep 7, 2024 - 09:21
Sep 7, 2024 - 16:26
 0
GOAT-ல் இடம்பெற்ற அரசியல் குறியீடுகள் என்னென்ன? தெறிக்கவிட்ட தளபதி!

நடிகர் டூ அரசியல்வாதி என்ற அவதாரம் எடுத்துள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் அடித்தளத்தை வலிமையாக கட்டமைத்து வருகிறார். முதன்மைக் கழக நிர்வாகிகள் முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளுக்குமான தேர்வுகளை விஜய்யே முன்னின்று தேர்வுசெய்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்படி கட்சியை கட்டமைப்பதில் தீவிரமாக இறங்கியுள்ள விஜய், கூட்டணி குறித்தான வேலைகளில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அந்தவகையில், வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பல்வேறு முக்கிய கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்புகள் இருப்பதாகவும், தவெக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும் எனவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படி பரபரப்பாக மாநாடு வேலைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், விஜய்யின் ‘தி கோட்’ படத்தை அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் 126+ கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சொல்லப்போனால், இரண்டே நாளில் 200 கோடிக்கும் மேல வசூல் செய்து புதிய ரெக்கார்டை படைத்துள்ளது. 

அரசியல், சினிமா என மாறி மாறி தீவிரமாக களமாடி வரும் விஜய், கட்சி தொடங்கி முதல்முறையாக அது குறித்த பல குறியீடுகளை படத்தில் இடம்பெற வைத்துள்ளார் என்றே சொல்லவேண்டும். 

கோட் படத்தில் இடம்பெற்றுள்ள ‘விசில் போடு’ பாடலில் தொடங்குகிற அரசியல் பிரசாரம், படம் நெடுகிலும் ஆங்காங்கே இடம்பெறுவதால் ரசிகர்களையும் தொண்டர்களையும் உற்சாகமாக்கியுள்ளது. Campaign-ஐ தான் தொடங்கட்டுமா என்று விசில் போடு பாடலில் தொடங்கியது இவரது அரசியல் ரெஃபெரென்ஸ். அதன்பிறகு பிரேம்ஜி டிராபிக் போலிஸிடம் மாட்டிக் கொள்ளும்போது, ‘எங்க மாமா கட்சி பேரை சொல்லக்கூடாதுனு வேற சொல்லிட்டாரு’ என்று சொல்லும் போது, அரங்கமெங்கும் தொண்டர்களின் கதறல் சத்தம் காதை கிழிக்கிறது. 

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் ஒவ்வொரு நடிகரும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டுமென்றே ஆசைப்படுவார்கள். அந்த ஆசை விஜய்யையும்விட்டு வைக்கவில்லை. படத்தில் விஜய் ஓட்டும் காரின் ரிஜிஸ்டர் எண் ‘TN07CM2026’ என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் தேர்தலை கூட சந்திக்காத விஜய், தான் முதல்முறையாக சந்திக்க உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதல்வராகிவிடுவார் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த நம்பர் பிளேட் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

இதைத் தொடர்ந்து, ’மட்ட’ பாடலில் நடிகை த்ரிஷா அணிந்துவரும் புடவையும் ஒரு அரசியல் குறியீடாகத்தான் பார்க்கப்படுகிறது. காரணம், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் சிவப்பு, மஞ்சள், வாகை பூ, யானை ஆகியவை இடம்பெற்றிருக்கும். இந்த நிலையில், த்ரிஷா அணிந்திருந்த புடவையில் மஞ்சள், வாகை பூவின் கலர் என இரண்டு இருந்ததால், அதுவும் ஒரு குறியீடுதான் என்கின்றனர் ரசிகர்கள். 

இறுதியாக, சிவகார்த்திகேயனுடனான காட்சியின் போது விஜய்யை பார்த்து, ‘இதைவிட முக்கியமான வேலை உங்களுக்கு இருக்கிறது போல… நான் இதை பாத்துக்குறேன்.. நீங்க அதை பாருங்க’ என்று சொல்வார் சிவகார்த்திகேயன். அந்த முக்கியமான வேலை அரசியல் தான் என்று ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், சினிமாவில் தன் இடத்தை சிவகார்த்திகேயனுக்காக விட்டுக் கொடுத்து அரசியல் எனும் முக்கிய வேலைக்காக வருகிறார் என்பதுதான் இந்த வசனத்தின் அர்த்தம் என்று ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். 

இப்படி படம் முழுக்க அரசியல் குறியீடுகளை விஜய் வைத்துள்ளது அவரது ரசிகர்களையும் தவெக தொண்டர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. முதல்முறையாக தன் படத்தில் கட்சி குறியீடு, அரசியல் குறியீடு ஆகியவற்றை வைத்துள்ள விஜய், தன் கடைசி படத்தில் நேரடி அரசியலை பேசுவதோடு, தன் கட்சி பெயரையும் பயன்படுத்துவாரா என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

சினிமாவில் அரசியல் கட்சிக் கொடி பயன்படுத்தும் எம்.ஜி.ஆர் ஸ்டலை கையில் எடுத்துள்ள விஜய்க்கு  இந்த முயற்சி கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow