தமிழ்நாடு

மெரினாவில் போதையில் போலீஸிடம் தகராறு... தெளிந்ததும் சிறைக்குச் சென்ற ஜோடி

சென்னை மெரினா கடற்கரையில் போலீஸாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை அடுத்து கைது செய்யப்பட்ட ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மெரினாவில் போதையில் போலீஸிடம் தகராறு...  தெளிந்ததும் சிறைக்குச் சென்ற ஜோடி
போதையில் போலீஸிடம் தகராறு செய்த ஜோடிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். காவலர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, லூப் சாலையில் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்தவர்களிடம் அங்கிருந்து கலைந்து போகக்கூறிய போது தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

அப்போது, சாலையில் நிறுத்தட்டு இருந்த காரை எடுக்கும்படி போலீசார் காருக்குள் இருந்த ஜோடியிடம் கேட்டுள்ளனர். ஆனால் ரோந்து போலீஸாரை மிகவும் இழிவாக பேசிய, அந்த ஜோடி அநாகரீகமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதில், போலீசார் நீங்கள் யார் என்று கேட்டதும், இருவரும் போஸ் கொடுத்து கிண்டல் செய்தனர். மேலும் அவர், நான் உதயநிதி ஸ்டாலினை இங்கேயே கூப்பிடுவேன் பார்க்கிறேயா? என போலீசாரை மிரட்டும் தொணியில் பேசினார்.

மேலும், வையாபுரி மூஞ்சு, பல்லி மூஞ்சு என போலீசாரை கிண்டல் கேலி செய்தார். அத்துடன், ‘நான் குடித்து தான் இருக்கிறேன். என்னால் வண்டி எடுக்க முடியாது. உன்னால் முடிந்ததை பார்’ என மிரட்டல் விடுத்தார். நாளை காலையில், உங்களது முகவரி எல்லாத்தையும் எடுத்து உங்களை காலி செய்து விடுவேன் என மிரட்டி அந்த நபர் இறுதியாக காரை வட்டமிட்டபடி எடுத்து சென்றார்.

இந்த காணொளி வைரலான நிலையில், காவல்துறையினரை இழிவாக பேசிய சந்திரமோகன் மற்றும் அந்த பெண் ஆகிய 2 பேரையும் நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். வேளச்சேரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரை தவறாக பயன்படுத்தி விட்டேன் எனக்கூறி காவலரை மிரட்டிய விவகாரத்தில் கைதான சந்திரமோகன் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில், மெரினா கடற்கரையில் காவல்துறையினரிடம் தகராறு செய்த ஜோடி, 15 வருடங்களாக இருவரும் தகாத உறவில் இருந்து வருவதாகவும், தினமும் மெரினாவில் காரில் வந்து குடிப்பதாகவும், இருவருக்கும் திருமணம் நடைபெற்று பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

சந்திரமோகன் வேளச்சேரியில் காரை வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்து தொழில் நடத்தி வருவதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சந்திரமோகன் மற்றும் தனலெட்சுமி இருவர் மீது, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்திரமோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வருகின்ற 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை மேஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.