தமிழ்நாடு

சீமானின் முதல் மனைவி யார்? விஜயலட்சுமியுடன் ரகசிய திருமணம்? சீமானை நெருக்கும் நீதிமன்றம்!

நடிகை விஜயலட்சுமி தான் சீமானின் முதல் மனைவியா என்று சென்னை உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது, நாம் தமிழர் தம்பிகளை கதிகலங்க வைத்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

சீமானின் முதல் மனைவி யார்?  விஜயலட்சுமியுடன் ரகசிய திருமணம்?  சீமானை நெருக்கும் நீதிமன்றம்!
சீமானின் முதல் மனைவி யார்? விஜயலட்சுமியுடன் ரகசிய திருமணம்? சீமானை நெருக்கும் நீதிமன்றம்!

பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. தொடர்ந்து சீமான் இயக்கிய வாழ்த்துகள் படத்தில் நடித்த விஜயலட்சுமி, அதன்பின்னர் மேலும் சில படங்களிலும் நடித்தார். வாழ்த்துகள் படத்தில் நடித்த போது தான், சீமான் - விஜயலட்சுமி இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து இருவரும் மதுரையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாக, விஜயலட்சுமி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். 

இதன் தொடர்ச்சியாக தான், சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி முன்வைத்த குற்றச்சாட்டு, விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. அதன்படி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக, கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார் விஜயலட்சுமி.

இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் சீமான். அதில், 2011ம் ஆண்டு அளித்த புகாரை, 2012ம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக்கொள்வதாக விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்தனர். ஆனால் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

மேலும், வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்கு, விஜயலட்சுமி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின்னர் வழக்கு பட்டியலிடப்படவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் மீண்டும் வீசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான்சத்தியன், ஏற்கனவே 2011ம் ஆண்டு வழங்கிய புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும், பின்னர் 2023ல் கொடுக்கப்பட்ட புகாரையும் திரும்பப் பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார். இந்த புகார் தூண்டுதலின் பேரில் கொடுக்கப்பட்ட ஒன்று என்றும், எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

அதேநேரம் காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், இது பாலியல் வன்கொடுமை வழக்கு என்றும், இதுகுறித்து விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார் எனவும், அதனை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார். அதேபோல், இந்த வழக்கை காவல்துறை மீண்டும் விசாரிக்க வேண்டும் என விஜயலட்சுமி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். 

கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள கோயிலில் சீமான் மற்றும் விஜயலட்சுமி இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், 2008 ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார் என்பதால், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், சீமான் மீதான புகாரை நடிகை விஜயலட்சுமி எதற்காக வழக்கை திரும்ப பெற்றார்? வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார். சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்துவிட முடியாது என்றும், இதுகுறித்து விசாரித்து 12 வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்பின்னர் இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். சீமான் - விஜயலட்சும் விவாகரம் முன்பெல்லாம் தேர்தல் நேரத்தில் பரபரப்பாக பேசப்படுவதும், பின்னர் அடங்கிவிடுவதுமாக இருந்து வந்தது. 

இந்தநிலையில் சீமானின் முதல் மனைவி யார் என்று நீதிமன்றமே அவருக்கு செக் வைக்கத் தொடங்கியிருப்பது நாம் தமிழர் கட்சித் தொண்டர்களை கதிகலங்க வைத்துள்ளது. ஏற்கெனவே சீமான் மீது குறைகூறி கட்சியில் இருந்து பலர் கூண்டோடு விலகிவரும் நிலையில் விஜயலட்சுமி வழக்கு விவகாரம் சீமானுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.