சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் தன்னுடைய வாழ்த்துச்செய்தியை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் உலகத் தாய்மொழி நாளான இன்று, நம் தாய்நிகர் தமிழ் மொழியைப் போற்றி வணங்குவதுடன், எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும் மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போதும் மதிப்பளித்து, அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும் அதனை “உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்” என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம். தமிழ் வெல்லும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை ஊக்குவிக்க மாநிலங்களுக்கு தனி கல்வி நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையை புறக்கணிப்பதால், மத்திய அரசு தொடர்ந்து, மும்மொழிக்கொள்கையை தமிழக அரசின் மீது திணிக்கும் வகையில், செயல்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் விமர்சித்து வருகின்றனர். தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் புறக்கணிக்கும் மத்திய அரசு கண்டித்து ஆளும் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு மும்மொழி கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது. மும்மொழிக் கொள்கை என்பது இந்தி திணிப்புக்கு வழி வகுக்கும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான காரசார விவாதங்கள் திமுக மற்றும் பாஜக இடையே அதிகரித்துள்ள சூழலில், அதிமுக இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.