மாநாட்டின் போது உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி.. கண்ணீர் மல்க பேசிய விஜய்
தவெக மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அக்கட்சி தலைவர் விஜய் நிதியுதவி வழங்கினார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்த விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் ‘2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் நமது இலக்கு’ என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கடந்த மாதம் 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தை அடுத்த விக்கிரவாண்டி வி.சாலையில் தவெக முதல் கட்சி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் விஜய் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல கட்சிகளும் விஜய்யை ஆதரித்தும், எதிர்த்தும் பேசி வந்தனர். மேலும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் போது திமுகவிற்கும், தவெகாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்றும் அரசியல் வட்டாரத்தில் செய்திகள் உலா வருகின்றன. இதையடுத்து தவெக மாநாட்டிற்கு 46 விவசாயிகள் நிலங்களை கொடுத்திருந்தனர்.
மாநாடு சிறந்த முறையில் நடைபெற்று முடிந்த நிலையில், அறிக்கை வாயிலாக விவசாயிகளுக்கு விஜய் நன்றி தெரிவித்திருந்தார். அதேசமயம் உங்களை நேரில் சந்தித்து மரியாதை செய்யவும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சமீபத்தில் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரையும் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து மதிய விருந்து அளித்து விஜய் கெளரவம் செய்தார். தொடர்ந்து, மாநாட்டிற்கு பந்தல் போட்டவருக்கு தங்க மோதிரம் வழங்கினார்.
தவெகா மாநாட்டின் போது தொண்டர்கள் பலர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தொண்டர்கள் சிலர் வெவ்வேறு பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தவெக மாநாட்டின் போது உயிரிழந்த தொண்டர்களின் குடும்பங்களுக்கு விஜய் நிதியுதவி வழங்கினார். குடும்ப சூழலைப் பொருத்து சிலருக்கு இரண்டு லட்சம் ரூபாயும், சிலருக்கு ஐந்து லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மகிழ்ச்சியான சூழலில் உங்களை சந்திக்க விரும்பினேன். ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாக உயிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் கண்ணீருடன் விஜய் பேசினார். மேலும், என்ன தேவை இருந்தாலும் தன்னை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்திய விஜய், இந்த குடும்பங்களுக்கான தேவையை மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
What's Your Reaction?