தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கியது. இதில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டத்தை எதிர்க்கும் வகையில் தவெக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் அக்கட்சியின் தலைவர் விஜய் கையெழுத்திட்டு கெட்-அவுட் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பிறப்பால் ஒரு தலைவரை உருவாகக்கூடாது, மன்னராட்சி ஒழிக்கப்படவேண்டும் என்கிற ஒரு உண்மையை கூறியதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் தன்னை சூழ்ந்த போது தன்னை அழைத்தவர் விஜய் என்று கூறினார்.
சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது அதனை துறந்து அரசியலுக்கு வந்தவர் விஜய் என்றும், தளபதி என்ற நிலையில் இருந்து தலைவர் என்ற பரிமாணத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். பெரியாரின் சமூகநீதி பேசுபவர்கள், சாதி அரசியல் பேசி தேர்தலில் வெற்றி பெற்று ஊழலை முதற்கண்ணாகவும், கொள்கைகளாகவும் கொண்டுள்ளதாகவும், ஊழல்வாதிகளின் கைகளில் தமிழக அரசியல் இருப்பதை துடைத்தெறிய வேண்டும் என்றும் கூறினார்.
சினிமா துறையில் பல தொழில்களை நடத்தி கொண்டிருக்கும் அரசாக இன்றைய அரசியல் உள்ளதாகவும், தங்களிடம் பணம் இல்லை, உழைப்பும், மக்கள் ஆதரவுமே உள்ளதாகவும் தெரிவித்தார். வெளிநாட்டில் பொருளாதாரத்தை உருவாக்கி கடன் வாங்குவர், தமிழகத்தில் கடனை உருவாக்கி ஊழல் செய்வதாகவும், தமிழகத்தின் கடன் 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், அடுத்த 63 வாரங்களுக்கு விஜய்யே தமிழ்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் என்றும், அண்ணா, எம்.ஜி.ஆர் போல தமிழகத்தில் புதிய மாற்றத்தை விஜய் ஏற்படுத்துவார் என்றும் கூறினார். தொடர்ந்து, நம் கொள்கைகளை உள்வாங்கி மேலும் பல தலைவர்கள் வர தயாராக உள்ளனர். பல பூகம்பங்கள் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.