சினிமா

20 வயதிலேயே இப்படி ஒரு சோகமா?.. பிரபல தயாரிப்பாளரின் மகள் புற்றுநோயால் மரணம்..

சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.

20 வயதிலேயே இப்படி ஒரு சோகமா?.. பிரபல தயாரிப்பாளரின் மகள் புற்றுநோயால் மரணம்..
புற்றுநோயால் மரணமடைந்த திஷா குமார்

Tishaa Kumar Death News : பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கிரிஷன் குமாரின் மகள் திஷா குமார் புற்றுநோயால் மரணமடைந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட கிரிஷன் குமார் முன்னாள் நடிகர் மட்டுமல்லாமல், பிரபல சினிமா தயாரிப்பாளராகவும் விளங்கி வருகிறார். இவர், 1993ஆம் ஆண்டு வெளியான ஆஜா மேரி ஜான், கசம் தேரி கசம், ஷுபம், 1995ஆம் ஆண்டு வெளியான பெவஃபா சனம், 1999ஆம் ஆண்டு வெளியான பக்லா கஹின் கா, 2000ஆம் ஆண்டு வெளியான பாபா தி கிரேட் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், லக்கி: No Time for Love, ஹம்கோ தீவானா கர் கயே, ஈஷா தியேல் மற்றும் ஃபர்தீன் கான் நடிப்பில் வெளியான டார்லிங், லிங் ரோட், ஏர்லிஃப்ட், சத்யமேவ ஜயதே, மார்ஜவான், தேங்க் காட், சத்யமேவ ஜயதே 2, ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

மேலும், மற்ற தயாரிப்பாளார்களுடன் இணைந்தும் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் தனது மருமகன் பூஷன் குமாருடன் இணைந்து டி-சீரிஸின் இணை உரிமையாளராகவும் உள்ளார். இவருக்கு தன்யா சிங் என்ற மனைவியும், திஷா குமார் என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், திஷா குமார் புற்றுநோயால் நீண்ட நாட்களாக போராடிக்கொண்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், வெறும் 20 வயதே நிரம்பிய திஷாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவரை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து டி-சீரிஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நோயுடனான நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு. கிரிஷன் குமாரின் மகள் திஷா குமார் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இது குடும்பத்திற்கு கடினமான நேரம் ஆகும். குடும்பத்தின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, திஷா குமாரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.