தமிழ்நாடு

விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது.. விஜயை மறைமுகமாக சாடிய வடிவேலு..!

விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது அவற்றையெல்லாம் சிக்ஸர்கள் அடிப்பது போல முதல்வர் அடிப்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை மறைமுகமாக சாடிய வடிவேலு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை தொடர்ந்து  முதல்வரின் பேரன்  இன்பநிதியும் மக்களுக்கு நிறைய செய்ய உள்ளார் என இன்பநிதியை அரசியலுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது.. விஜயை மறைமுகமாக சாடிய வடிவேலு..!
விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது.. விஜயை மறைமுகமாக சாடிய வடிவேலு..!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் சென்னை யானை கவுனியில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, நடிகர் வடிவேலு,  நடிகர் அஜய் ரத்னம், நடிகை குட்டி பத்மினி  ஆகியோர் கலந்து கொண்டு முதல்வரின் சிறப்புகள் குறித்து பேசினர். 

இந்த நிகழ்ச்சியில்  நடிகர் வடிவேலு பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரால்  பயனடையாத மக்களே கிடையாது.விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது. ஆனால்,  அவை எல்லாவற்றையும் சிக்ஸர்கள் அடிப்பது போல முதல்வர் அடித்து வருகிறார். தமிழ்நாடு முதல்வர் இல்லை என்றால் தமிழே இன்று இருந்திருக்காது. மிகவும் அருமையான திறமையான முதல்வர் ஸ்டாலின். ஆனால் பொறுமையான முதல்வரும் கூட.  பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு, முதல்வரை பார்த்து பொறுமையே கடுப்பாகிவிட்டது.  பொறுமையாக இருந்து கொண்டே மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை செய்து கொண்டே இருக்கிறார்.

என்ன வேணாலும் சொல்லு,  எதை வேண்டுமானாலும் செய் என மக்கள் பணிகளை தொடர்ந்து முதல்வர் செய்து கொண்டே வருகிறார்.  அதுதான் முதல்வரிடம் மிகவும் பிடித்துள்ளது. அவர் மட்டுமல்லாமல் அவரைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதியும் சிறப்பாக செயல்படுகிறார். துணை முதல்வர் உதயநிதி மக்களுக்காக எந்நேரமும் உழைத்துக் கொண்டே இருக்கிறார்.

ராமநாதபுரத்தில் எனது குலதெய்வ கோயிலில் 25 ஏக்கரை திருடிவிட்டதாக கடந்த ஆண்டு அமைச்சர் சேகர் பாபுவிடம் முறையிட்டேன்.  சேகர்பாபு கோவிலுக்கு பேப்பர்கள் இருக்கா என கேட்டார். இருக்கு என காண்பித்தேன் அடுத்த நாள் காலையில் இடம் கோவிலிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டது. அதேபோல இம்முறையும் கோபுரம் கட்டி தர அமைச்சரிடம் கேட்டு இருந்தேன் உடனடியாக கோபுரம் கட்டி தருவதாக கூறி கோபுரத்தின் வேலைகள் நடைபெற்று வருகிறது என தனது பாணியில் அடைமொழியுடன்  காமெடியாக வடிவேலு பேசினார்.  

முதல்வரின் போர்படை தளபதிகளாக தமிழக அமைச்சர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.  வரும்போதே அரசியல் எல்லாம் பேச வேண்டாம் என அமைச்சர் கூறிவிட்டார், தலைவரை மட்டும் வாழ்த்தும்படி கூறினார். முதல்வரும், முதல்வரின் மகனும், முதல்வரின் பெயரனும் மக்களுக்கு நிறைய செய்ய உள்ளார்கள்.  

காக்கா, கிளி, மாடு எல்லாம் அதனுடைய தாய்மொழியில் கத்துகின்றன. அவற்றையெல்லாம் மாறி மாறி கத்த சொன்னால் கத்துமா? அது வேண்டாம்.யார் யார் எதை கற்றுக் கொள்ள வேண்டுமோ கற்றுக்கொள்ளட்டும்,  எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம். என மும்மொழிக் கொள்கை குறித்து மறைமுகமாக பேசினார்.  

நாட்டிற்கு ஏதேதோ அடையாளமாக உள்ளது,  எங்களுடைய தமிழ்நாட்டிற்கு தமிழ் தான் அடையாளம். ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மொழி,  முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பார்வையில் உள்ளது.எங்கள் தமிழ்மொழி உலகுக்கு எல்லாம் கற்றுத் தரும் மொழி.  ஆங்கிலம் வெறும் கனெக்டட் மொழிதான். சின்ன சின்ன வார்த்தைக்கு அர்த்தமுள்ள தங்கமான மொழி தமிழ் மொழி. நான் அரசியல் பேசவில்லை என்னுடைய மொழியை பற்றி தான் பேசுகிறேன்.

இது திமுக மேடை மட்டுமல்ல, தமிழனின் மேடை, தமிழ்நாட்டின் மேடை ஆகும். முதல்வர் இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் எந்த பாதிப்பும் வராது.  முதல்வர் ஒவ்வொரு வீட்டுக்கும் மூத்த தகப்பன். முதல்வருக்கு தூக்கமே கிடையாது,  இரண்டு மணி நேரங்கள் மட்டுமே ஒரு நாளைக்கு தூங்குகிறார், எந்நேரமும் பணியில் தான் உள்ளார்.

பின் பொதுமக்கள் வடிவேலுவிடம் பாட்டு பாடும் படி கேட்டதன் பெயரில் மேடையிலேயே சத்தியமே  லட்சியமாய் என்ற நீலமலைத்திருடன் பாடலை  பாடிய வடிவேலு பாடினார். 2026 இல்  200 சீட்டுக்கு மேல் பெற்று திமுக ஆட்சியைப் பிடிக்கும்,  மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என தெரிவித்தார்.