காவல்துறையினர் தவறாக பயன்படுத்தப்படுவதை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பொதுமக்கள் பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினர்,
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி கஜலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நாகராஜ் மீது 2014 ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் புலன் விசாரணை நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, குற்ற வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தி, அதுசம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து புலன் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி பல்வேறு சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சுற்றறிக்கைகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க வலியுறுத்திய நீதிபதிகள், காவல்துறையினருக்கு பணி நேரம் என எதுவும் நிர்ணயிக்கப்படாததால் மனஅழுத்தத்துடன் பணியாற்றுவதாக வேதனை தெரிவித்தனர்.
மேலும், காவல்துறையினர், தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தப்படுவது குறித்து தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், வரி செலுத்துவோரின் பணத்தில் தனியாருக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையினரை பயன்படுத்தக் கூடாது எனவும், இந்த நடைமுறையை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டுள்ளனர்.
காவல்துறையினர் தவறாக பயன்படுத்தப்படுவதை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பொதுமக்கள் பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினர், பொதுமக்களுக்காக தான் சேவை செய்ய வேண்டுமே தவிர, தனியாருக்கு பாதுகாப்புக்கு பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டனர்.