கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற சென்டிமென்ட் எல்லாம், காலாவதியான காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். பிடித்திருந்தால் சேர்ந்து வாழ்வதும், பிடிக்கவில்லை என்றால் பிரிந்து செல்வதும் ரொம்பவே சர்வசாதாரணமாகிவிட்டது. அதேநேரம், திருமண உறவில் தங்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க இன்றைய பெண்கள் தயாராக இல்லை. அப்படி தனது சுயமரியாதை மறுக்கப்பட்டதால், இந்திரகுமாரி என்ற பெண் எடுத்த அதிரடி முடிவு, வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் தலைநகர் பாட்னா அருகேயுள்ள ஜமுய் (Jamui) பகுதியில் வசித்து வருபவர் இந்திர குமாரி. இவருக்கும் நகுல் சர்மா என்பவருக்கும், கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மதுவுக்கு அடிமையான நகுல் சர்மா, திருமணமான நாள் முதல், இந்திர குமாரியை கொடுமை செய்து வந்துள்ளார். மனதளவிலும், உடல் ரீதியாகவும் இந்திர குமாரியை தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார் நகுல் சர்மா. இதனால் வெறுத்துப்போன இந்திர குமாரி, நகுல் சர்மாவிடம் இருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டும் என முயற்சி செய்துள்ளார்.
அப்போது தான் இந்திரகுமாரியின் வாழ்க்கையில் பவன் குமார் யாதவ் என்பவர் என்ட்ரியானதாக சொல்லப்படுகிறது. ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பவன் குமார் யாதவ், கடன் வசூலிப்பதற்காக நகுல் சர்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது இந்திர குமாரியின் மனதை பறித்துள்ளார் பவன் குமார். ஒருகட்டத்தில் இது காதலாக மலர, சில மாதங்களாக இது யாருக்கும் தெரியாதபடி ரகசியம் காத்துள்ளனர். இந்நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன்னர் பீஹாரில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள இந்திரகுமாரியின் உறவினர் வீட்டிற்கு பறந்த காதல் ஜோடி, பின்னர் மீண்டும் ஜமுய் திரும்பி அங்குள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இவர்களது திருமணத்திற்கு பவன்குமார் குடும்பத்தினர் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டாலும், இந்திரகுமாரி வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்கள் பவன்குமாருக்கு எதிராக புகார் கொடுக்க, இந்திரகுமாரியோ நானாக விரும்பி தான் இந்த திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார். குடிகார கணவன்களால் கைவிடப்பட்ட இரண்டு பெண்கள், அவர்களே ஒருவருக்கொருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இங்கே குடிகார கணவனால் கொடுமையை அனுபவித்து வந்த பெண், கடன் வசூலிக்க வந்தவரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். இந்தச் சம்பவம், பீஹாரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.