இன்றும் வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் இன்று 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Dec 2, 2024 - 07:09
 0
இன்றும் வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?
இன்றும் வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் மெதுவாக நகர்ந்து கரையை கடந்துள்ளது. புதுச்சேரி அருகே கடந்த 30ம் தேதி இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் புயல் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 70-80 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசியது. இதையடுத்து, ஃபெஞ்சல் புயல் மெதுவாக நகர்ந்து 6 மணிநேரத்தில் கரையை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அதிவேகமாக வீசிய காற்றால் சென்னை மெரினா உள்ள்ளிட்ட பகுதிகளில் புறக்காவல் நிலையம் சரிந்து விழுந்து சேதமடைந்தது. புளியந்தோப்பு, மூலக்கடை ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்த நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் படகு மூலம் மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து வெள்ளம் வடியாத இடங்களில் மோட்டார்களை கொண்டு மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 

இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருந்தாலும் தமிழ்நாட்டில் இன்றும் (டிச. 2) நாளையும் (டிச. 3) அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தேனி, மதுரையில் ஓரிரு இடங்களில் கனமழையும், நாளை திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மழை காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளி-கல்லூரி களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow