Sun TV Serial Moondru Mudichu Promo : விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் குடியேறினார் நடிகை ஸ்வாதி கொண்டே. ‘ஈரமான ரோஜாவே’ தொடரின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்தாண்டு 2வது பாகம் ஒளிபரப்பானது. திரவியம், சித்தார்த், ஸ்வாதி, கேப்பிரியல்லா ஆகியோர் நடித்த இந்த சீரியல், 500 எபிசோடுகளைக் கடந்து வெற்றி நடைபோட்டது.
இந்த சீரியலில் பார்த்தி - ஜீவா என்ற அண்ணன் - தம்பி ரோலில் சித்தார்த் மற்றும் திரவியமும், பிரியா - காவியா அக்கா என்ற அக்கா - தங்கை ரோலில் ஸ்வாதி மற்றும் கேப்ரியல்லாவும் நடித்தனர். ஜீவாவும் காவியாவும் காதலித்து வந்த நிலையில் விதியின் விளையாட்டு காரணமாக பார்த்தி - காவியாவுக்கும், ஜீவா - பிரியாவுக்கும் திருமணம் நடந்துவிடுகிறது. இதன் பிறகு குடும்பத்துக்குள் ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்வுகளையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இதற்கிடையில் இரண்டு ஜோடிகளுக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் ஆங்காங்கே நம்மை சிரிக்கவைக்கும் நகைச்சுவையும் இந்த சீரியலின் பக்க பலமாக அமைந்தது.
‘ஈரமான ரோஜாவே 2’ம் பாகம் முடிந்த பிறகு கேப்ரியல்லா, திரவியம் மற்றும் சித்தார்த் ஆகியோர் அடுத்தடுத்த சீரியல்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றனர். அதே போல் தற்போது சன் டிவியில் விரையில் ஒளிபரப்பாக இருக்கும் ‘மூன்று முடிச்சு’ (Moondru Mudichu) என்ற புதிய தொடரின் லீட் ரோலில் ஸ்வாதி கொண்டே நடிக்கிறார். அண்மையில் வெளியான இந்த புதிய சீரியலின் ப்ரோமோ ஸ்வாதியின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க: தமிழக வெற்றிக்கழகம்.. நடிகர் விமல் சொன்ன ஒற்றை பதில்
பெங்களூருவைச் சேர்ந்த ஸ்வாதி கொண்டே ‘கமரொட்டு செக்போஸ்ட்’, ‘வென்னிலா’, ‘ராமராஜ்யா’, ‘கட்டு கத்தே’ உள்ளிட்ட கன்னடப் படங்களில் லீட் ரோலில் நடித்துள்ளார். இதையடுத்து கன்னட சின்னத்திரையில் களமிறங்கிய அவர் பிரபல சீரியல் ஒன்றிலும் முக்கிய வேடத்தில் நடித்தார். அவரது நடிப்பைக் கண்டு வியந்த தமிழ் சீரியல் இயக்குநர்கள், அவரை அப்படியே கன்னடத்தில் இருந்து தூக்கி வந்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகப்படுத்தினர். அதன் முதல் படியாகத்தான் ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானார். ஸ்வாதி தனது தனித்துவமான நடிப்பாலும் கண்களை கவரும் அழகாலும் தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட்டார் என்றே கூறலாம். இதையடுத்து தற்போது ‘கார்த்தி 27’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கக் கமிட் ஆகியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி காம்பினேஷனில் உருவாகி வரும் இந்த புதிய படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.