PM Modi: அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி... உற்சாக வரவேற்பளித்த இந்தியர்கள்!
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை: பிரதமர் மோடி 3 நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று (செப்.21) காலை அமெரிக்கா புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அமெரிக்கா சென்ற அவருடன், உயர் அதிகாரிகளும் பயணித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையம் சென்றடைந்தார், அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வார் நகரில் நடக்கிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். மேலும் சில உலக நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் 6-வது குவாட் மாநாட்டில் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டியது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன. மேலும், அமெரிக்கா உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 22-ம் தேதி நியூயார்க் செல்லும் பிரதமர் மோடி, அங்கு யூனியன்டேலில் உள்ள நாசாவ் கொலிசியம் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றுகிறார்.
15 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள கூடிய இந்த அரங்கில், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகளுடனான சந்திப்பில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். தனது சுற்றுப்பயணத்தின் கடைசி நாளான 23-ம் தேதி, ஐக்கிய நாடுகள் அவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். அன்றைய தினம் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?