தமிழ்நாடு

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்.. கருணைத் தொகை வழங்கிய அதிகாரிகள்

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ரயில்வே அதிகாரிகள் கருணைத் தொகை 50 ஆயிரத்தை வழங்கினர்.

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்.. கருணைத் தொகை வழங்கிய அதிகாரிகள்
கர்ப்பிணி பெண்ணுக்கு கருணைத் தொகை வழங்கிய அதிகாரிகள்

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி பெண் ஒருவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 6-ஆம் தேதி தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்வதற்கு கோயம்புத்தூர் - திருப்பதி செல்லும் இண்டர் சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். 

அப்போது கழிவறைக்கு சென்ற கர்ப்பிணி பெண்ணிடம் ஹேமராஜ் என்பவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த ஹேமராஜ், அப்பெண்ணை வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே  ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.

இதில் அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டதுடன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரயில்வே காவல்துறையினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் படிக்க: ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு

இதையடுத்து கப்பிணி பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.வி.குப்பம் செல்லும் வழியில் ஹேமராஜை போலீசார் கைது செய்தனர். 30 வயதான ஹேமராஜ் அடிக்கடி ரயில்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் பட்டியலில் உள்ளார். 

ஏற்கனவே கடந்த 2024-ம் ஆண்டு ஹேமராஜ் மீது சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண்ணை குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலை பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்த வழக்கும், 2022 -ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் செல்போனை பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கும் உள்ளது.

இந்நிலையில், ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணை  சென்னை ரயில்வே கூடுதல் பொது மேலாளர், சென்னை ரயில்வே மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், அவருக்கு கருணைத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்த 50 ஆயிரத்தை வழங்கினர்.