சினிமா

’சிறந்த நடிகர்’ என கே.பி. புகழாரம் சூட்டிய குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மரணம்..

பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவு காரணாமாக உயிரிழந்தார்.

’சிறந்த நடிகர்’ என கே.பி. புகழாரம் சூட்டிய குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மரணம்..
குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மரணம்

தமிழ் சினிமாவை மக்களின் மனதில் ‘குணச்சித்திர நடிகர்’ எனப் பெயர் பெறுவது அவ்வளவு எளிதானதல்ல. அப்படி பிடித்தாலும், தொடர்ந்து தக்கவைப்பது என்பது அதைவிட கடினமான விஷயமாகும். அப்படி மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்தவர் தான், நடிகர் டெல்லி கணேஷ்.

தூத்துக்குடியில் கடந்த 1944ஆம் ஆண்டு பிறந்த டெல்லி கணேஷ், 1964ல் இருந்து 1974 வரை இந்திய வான்படை வீரராக இருந்து பின் திரையுலகில் நடிகராக களமிறங்கியவர். அதன்பின் 1976ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகர் டெல்லி கணேஷ், இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் (1977) என்பதாகும். தமிழ் திரையுலகுக்கு இவரை இயக்குனர் கே. பாலசந்தர் தான் அறிமுகம் செய்தார். கமல்ஹாசனிடம் ஒருமுறை, இவன் சிறந்த நடிகராக வருவார் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற சில படங்களில் வில்லனாகவும் நடித்து கவனம் ஈர்த்தார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா மற்றும் தெனாலி, அவ்வை சண்முகி போன்ற படங்கள் டெல்லி கணேஷ் நடித்த குறிப்பிடத்தக்க படங்களாகும்.

அதேபோல், ரஜினிகாந்த் உடன் பொல்லாதவன், மூன்று முகம், எங்கேயோ கேட்ட குரல், சிகப்பு சூரியன், மனிதன், வேலைக்காரன், ராகவேந்திரா, பாபா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும், தான் ரஜினிகாந்த் உடன் நடித்ததை விட, கமல்ஹாசன் உடன் நடித்த படங்கள் தான் அதிகம் பேசப்படுகிறது என்று அவரே ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி கணேஷ் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்தார். 1979ம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு "தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். அதோடு, 1993 - 1994ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் "கலைமாமணி விருது"ம் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார்.

கமல் நடித்த இந்தியன் 2 டெல்லி கணேசன் அவர்களின் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் அவர் உடல்நலக்குறைவு காரணமாக ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவிற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.