ஆள்மாறாட்டம்.. கோடிக்கணக்கில் டிஜிட்டல் மோசடி.. அசாம் மாநில நபர் கைது
மும்பை போலீஸ் போன்று ஆள்மாறாட்டம் செய்து டிஜிட்டல் கைது [Digital Arrest] செய்து மோசடியில் ஈடுபட்ட அசாம் மாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற CPWD நிர்வாக அதிகாரிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 03ஆம் தேதி, தொடர்பில் இல்லாத எண்ணிலிருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் மகாராஷ்டிரா காவல்துறை எனக் கூறி புகார்தாரர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கைது வாரண்ட் நிலுவையில் உள்ளது என்றும் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் புகார்தாரருடைய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் மூலம் நடைபெற்றுள்ள பண மோசடி வழக்கு தொடர்பாக மும்பையில் ஆஜராகுமாறு அழைப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
தவிர, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) மூத்த தொலைத் தொடர்பு அதிகாரி போன்ற ஒரு நபருக்கு அந்த அழைப்பு அனுப்பப்பட்டு புகார்தாரருடைய குடும்பம் மற்றும் வங்கி விவரங்களை கேட்டறிந்து விசாரணை முடியும் வரை வாட்ஸ்அப் விடியோ அழைப்பில் தொடர்ந்து இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், புகார்தாரருடைய வங்கி கணக்கில் வைத்திருக்கும் நிரந்தர வைப்புத் தொகை மற்றும் இதர வங்கி கணக்கில் உள்ள பணத்தினை அவர்கள் தெரிவிக்கும் ரிசர்வ் வங்கி கணக்கிற்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் சரிபார்ப்புக்கு பின்னர் புகார்தாரருடைய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி விடுவதாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதை உண்மை என்று நம்பி கடந்த செப்டம்பர் மாதம் 04ஆம் தேதி புகார்தாரர் சந்தேக நபர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு இரு தவணைகளாக ரூ.88,00,000/- [எண்பத்து எட்டு லட்ச ரூபாய்] செலுத்தியுள்ளார். அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சென்னை காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் புகார்தாரர் பணம் செலுத்திய வங்கி கணக்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கப்பட்டுள்ளதும் அந்த வங்கி கணக்கிற்கு கடந்த செப்டம்பர் 04ஆம் தேதி அன்று மட்டும் ரூ.3,82,27,749/- [3 கோடியே 82 இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 749] ரொக்கமாக இது போன்ற இணையதள குற்றங்கள் மூலமாக வரவு வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், அன்றைக்கு மட்டும் இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 178 வங்கி கணக்குகளுக்கு ஒரே நாளில் பணம் அனுப்பப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு காவல் உதவி ஆணையாளர் தலைமையில் தனிப்படை போலீசார் அசாம் மாநிலம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தை சேர்ந்த பார்த்தா பிரதிம் போரா வயது 38 த/பெ.நோமல் சந்திரா போரா Trust Home என்ற நபரை நவம்பர் 14ஆம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சமீப காலமாக மும்பை போலீஸ் என்று கூறியோ, தொலைத் தொடர்பு அதிகாரிகள் போன்றோ, பிரபல கொரியர் நிறுவனங்களைப் பேன்றோ பொதுமக்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், கைதிலிருந்து விடுபட ரிசர்வ் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பும்படியும் இல்லையெனில் கைது செய்யப்போவதாக மிரட்டி பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை பெற்று மோசடி பேர்வழிகள் பொதுமக்களை ஏமாற்றுகின்றனர்.
மேலும் இது சம்மந்தமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எந்தவொரு மாநில காவல்துறையோ, CBI, TRAI போன்ற அரசு துறை சார்ந்த அதிகாரிகளோ இது போன்று ஸ்கைப், வாட்ஸ்ஆப், சிக்னல் போன்ற செயலிகள் மூலம் அழைத்து டிஜிட்டல் கைது செய்து விசாரணை செய்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அதை உண்மை என்று நம்பி அடையாளம் தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என்றும், ஏதேனும் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலைதள முகவரி https://cybercrime.gov.in-ல் புகார் தெரிவிக்கும்படியாகவும் அறிவுறுத்தியுள்ளார்.
What's Your Reaction?