'இனி இப்படி நடக்கக்கூடாது.. நீதிமன்றம் தண்டனை அளிக்கட்டும்'.. மம்முட்டி ஆவேசம்!

''ஹேமா கமிட்டி அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும். நீதிமன்றம் தண்டனைகளை முடிவு செய்ய வேண்டும்'' என்று மம்முட்டி கூறியுள்ளார்.

Sep 1, 2024 - 14:47
Sep 1, 2024 - 16:49
 0
'இனி இப்படி நடக்கக்கூடாது.. நீதிமன்றம் தண்டனை அளிக்கட்டும்'.. மம்முட்டி ஆவேசம்!
Actor Mammootty

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு தமிழ், மலையாள முன்னணி நடிகை ஒருவர் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதன்பின்பு மலையாள திரையுலகில் நடிகைகள் உள்பட அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ம் ஆண்டு கேரள அரசு கமிஷன் அமைத்தது. 

நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தங்களது அறிக்கையை கேரள அரசிடம் சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் அதிரடியாக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

முன்னணி இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன், நடிகர்கள் ஜெயசூர்யா, ரியாஸ் கான், நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பல்வேறு நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார்களை கூறி வருகின்றனர். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் மலையாள திரையுலகினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். 

தொடர் பாலியல் புகார்களால் மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன் லால் உட்பட 17 உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக முன்னணி நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோர் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தனர். நடிகைகள் உள்ளிட்ட பெண்கள் மீது நடிகர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொறுப்பை தட்டிக்கழித்தது ஏன்? இது குறித்து முன்னணி நடிகர்கள் பதில் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

இந்த விவகாரம் குறித்து நேற்று முதன்முறையாக மனம் திறந்து பேசிய நடிகர் மோகன்லால், ''பாலியல் புகார்கள் தொடர்பாக நீதிமன்றமும், அரசும் தங்களது கடமையை செய்து வருகின்றன. மலையாள திரையுலகின் கடைநிலை ஊழியர்கள் கூட பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட கூடாது என்பதே எங்களது விருப்பமாகும்.

நான் எங்கும் ஓடிவிடவில்லை. இங்குதான் இருக்கிறேன். பாலியல் புகார்கள் தொடர்பாக ஹேமா கமிட்டி நடத்தி வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் உள்ளன. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக அம்மா சங்கத்தை (நடிகர் சங்கம்) மட்டும் குறை சொல்வது தவறு'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பாக முன்னணி நடிகர் மம்முட்டியும் இன்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட அவர், ''சமூகத்தில் நல்லது கெட்டது உள்ளது. இதேபோல் திரைத்துறையிலும் நல்லது கெட்டது இருக்கிறது. மலையாள திரையுலகில் அதிகார மையம் ஒன்றும் இல்லை. நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையை முழுமையாக வரவேற்கிறேன்.

ஹேமா கமிட்டி அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை காவல்துறை நேர்மையாக விசாரிக்கட்டும். நீதிமன்றம் தண்டனைகளை முடிவு செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow