தமிழ்நாடு

பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது- நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது- நீதிமன்றம் உத்தரவு
பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, பிப்ரவரி 18-ம் தேதி, சென்னையில் கந்தக்கோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் ஹிந்து முன்னணி அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி இளந்திரையன், இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த போராட்டக்காரர்கள் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் தவறாக பயன்படுத்த முடியாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதுரையில் நடந்த போராட்டத்தின் போது, கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதற்காக இரண்டு வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. இரு பிரிவினருக்கிடையே விரோதத்தை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது என உத்தரவில் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் நடந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மதத்தினருக்கு இடையிலான பிரச்சனைகள் வருவாய் கோட்டாட்சியர் முன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணப்பட்டது. இது தொடர்பான தீர்மானத்தை மதுரை ஆட்சியரும் ஏற்று கொண்டு உள்ளார். அதனால் திருப்பரங்குன்றம் மலையில் நடந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை.

அப்படி போராட்டம் நடத்தினால் அது மற்ற மதத்தினரை மீண்டும் தூண்ட செய்து பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நீதிபதி குறிப்பிடுள்ளார். பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்க கூடாது. மத ரீதியிலான பதட்டங்களை தணிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து பொது ஒழுங்கையும், மத நல்லிணக்கத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் இதுவரை இந்து, முஸ்லீம் மற்றும் ஜெயின் மக்கள் அமைதியாக வசித்து வந்துள்ளனர். ஒற்றுமையில் வேற்றுமை தான் நம் நாட்டின் பலம். அதனால் அனைத்து மத மற்றும் சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை அரசு பேண வேண்டும்.  மத நம்பிக்கைகளும், உணர்வுகளும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். 

அமைதி, மற்றும் மத நல்லிணக்கம் பாதிக்கும் வகையில் எவரையும் செயல்பட அனுமதிக்க கூடாது. இந்த வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க கூடாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லையென்றும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.