கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. மழைக்காலமும், பனிக்காலமும் முடிந்து கோடைக் காலம் தொடங்கிய நிலையில் பனி மூட்டம் நிலவி வருவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழைப் பொழிவு இல்லாமல் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. அதன்படி, இன்று காலை சூரிய உதயத்திற்கு பிறகும் கூட, கொடுமுடி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருப்பதால், அப்பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் படிக்க: சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு.. ரயில்-விமான சேவைகள் பாதிப்பு
இதேபோல் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் சாலைகளை ஆக்கிரமித்து இருப்பதால் கடும் சிரமத்திற்கு உள்ளான வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி மெதுவாக செல்கின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பனி குளிரில் நடுங்கியபடி செல்ல வேண்டிய சூழ்நிலையும் நிலவி வருகிறது.
தொடர்ந்து, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று விடிந்த பிறகும் கூட மார்கழி மாதத்தில் பொழிவதைப் போல கடும் பனி பொழிவு காணப்பட்டது. குறிப்பாக காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான வெள்ளை கேட், பொன்னேரி கரை, செவிலிமேடு, ஓரிக்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
இதேபோன்று சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால், மின்சார ரயில்கள் தாமதமானதால் காலை அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளானதாக கூறப்படுகிறது. மேலும், பனிப்பொழிவு காரணமாக விமானங்களின் வருகைப்பாடு, புறப்பாடு தாமதமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகள் பல மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.