இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்களுக்கு பிறகு ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
நடிகர் அஜித் தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க: பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது.. நடிகர் மாதவன் ஆதங்கம்
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தது. சமீபத்தில்‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள திரிஷாவின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று மாலை 7.03 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
‘பில்லா’, ‘வாலி’, ’மங்காத்தா’ போன்ற படங்களின் கலவையாக வெளியாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். முன்னதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: "எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு".. தாயாகும் 'கேம் சேஞ்சர்' பட நடிகை