ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையப் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (எ) வேலவன். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இவர் பல்வேறு நில மோசடி மற்றும் வீட்டுமனை, பண மோசடி உள்ளிட்ட புகாரில் சிக்கியதால் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு இவரது கார் ஓட்டுநராக இருந்த வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வஞ்சூர் கிராமம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின் மனைவி சுகாசினிக்கு அரசு ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி முதற்கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். பின்னர் சிறிது சிறிதாக மொத்தம் எட்டு லட்சம் ரூபாய் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சென்னை எழிலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
இதையடுத்து கடந்த 11-ஆம் தேதி கார் ஓட்டுநராக இருந்த சிவகுமார், சரவணனிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதற்கு சரவணன் தனது அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்றபோது சரவணனுடன் இருந்த சில நபர்கள் சிவகுமாரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சிவகுமார் உடனடியாக வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பிறகு தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த ராணிப்பேட்டை போலீசார், சிவகுமாரிடம் நடந்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் பெற்று கொலை முயற்சி, பணம் ஏமாற்றியது என 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து முன்னாள் மேற்கு மாவட்ட செயலாளர் சரவணனை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது மணல் கடத்தல், பண மோசடி, சொகுசு வீடு விவகாரம், சொகுசு விடுதி, உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் தொண்டர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய முன்னாள் மாவட்ட செயலாளரே இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பாட்டாளி மக்கள் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.