Diwali Flight Tickets: என்ன கொடுமை சாரே இது..? விமான டிக்கெட் கட்டணம் உயர்வு... தீபாவளி அட்ராசிட்டி!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருச்சி, கோவை, சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை: நாடு முழுவதும் நாளை மறுநாள் (அக்.31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். நவம்பர் 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால், சென்னைவாசிகள் அவர்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதன் முதற்கட்டமாக சென்னையில் இருந்து நேற்று ஒரேநாளில், 1,10,745 பயணிகள் அரசு சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். வழக்கமாக இயங்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 369 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் மற்ற ஊர்களில் இருந்தும் தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் வழக்கமாக இயங்கக் கூடிய ரயில்கள், சிறப்பு ரயில்கள் மூலமாகவும் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். அதேபோல், தனியார் ஆம்னி பேருந்துகளிலும், சொந்த கார்களிலும் ஏராளமானோர் பயணிக்க உள்ளனர். இவைகளை விட்டுவிட்டால் விமானங்களில் பயணிப்பது மட்டுமே ஒரே தீர்வு. ஆனால், வழக்கமான நாட்களில் விற்பனையாகும் விமான டிக்கெட்டுகளின் கட்டணம், தற்போது தீபாவளி பண்டிகை காரணமாக பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி, சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செல்ல, 2,382 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது, அதுவே தற்போது 8,211 முதல் 10,556 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் விமான கட்டணம் 4,109 ரூபாயாக இருந்தது. ஆனால் அடுத்த 2 நாட்களுக்கு 8,976 முதல் 13,317 ரூபாய் வரை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை டூ மதுரைக்கு சாதாரண நாட்களில் 4,300 ரூபாய் விமான கட்டணம். தீபாவளி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு 1,749 முதல் 17,745 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னையில் இருந்து கோவைக்கு சாதாரண நாட்களில் 3,474 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இது அடுத்த இரண்டு நாட்களுக்கு 7,872 முதல் 13,428 ரூபாய் வரையாக அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து சேலம் செல்லும் விமான கட்டணமும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, சாதாரண நாட்களில் 3,300 ரூபாயாக இருந்த விமான கட்டணம், அடுத்த 2 நாட்களுக்கு 8,353 முதல் 10,867 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தீபாவளிக்காக விமானத்தில் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டவர்களும், “என்ன கொடுமை சாரே இது” என தலையில் கை வைத்தப்படி நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டனர்.
What's Your Reaction?