சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடும் நபர்கள் புதிது புதிதாக நூதன மோசடிகளை கண்டுபிடித்து மக்களிடம் பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பழைய மோசடிகளை அப்டேட் செய்து சில நூதன மோசடிகளை அரங்கேற்றும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. புதிய போக்குவரத்து அபராத சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து, விதிக்கப்படும் அபராதத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம் என்ற வசதியை காவல்துறை தரப்பில் வாகன ஓட்டிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துக் காவலர்கள் விதிமீறல்களுக்கு ஏற்றவாறு அபராதம் விதிப்பார்கள். தற்போது நவீனத்துவமாக மாறி காவலர்கள் இல்லாமலேயே சிசிடிவி கேமராக்கள் மூலமாக அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. மேலும் இதுவரை கட்டாத அபராத தொகைகளையும் செலுத்துமாறு குறுஞ்செய்திகள் ஆர்டிஓக்கள் மூலமாக அனுப்பப்படுகின்றன.
இந்த குறுஞ்செய்தியில் வரும் இணையதள முகவரியை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகவே போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்தலாம். ஆனால் இந்த இணையதள முகவரியை போலியாக உருவாக்கி ஏற்கனவே சைபர் கிரைம் கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக காவல்துறை வாகன ஓட்டிகளை எச்சரித்து இருந்தது. தற்போது இந்த வகை மோசடியை அப்டேட் செய்து புதுவிதமான முறையில் வாகன ஓட்டிகளிடமிருந்து சைபர் மோசடி கும்பல் பணத்தை மோசடி செய்ய ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக குறுஞ்செய்தியில் போக்குவரத்து விதிமீறல் ஈடுபட்டதாகவும், அதற்கான சலான் போடப்பட்டதாக கூறி சலான் எண்ணை மட்டும் பதிவு செய்து, அபராத பணத்தை செலுத்துமாறு அனுப்பப்பட்டிருக்கும். சந்தேகம் வராத படி ஆர்.டி.ஓ.வில் இருந்து மேலும் பணத்தை செலுத்துவதற்காக அந்த குறுஞ்செய்தியில் இடம்பெற்றிருக்கும் vahanpativahann.apk என்ற லிங்குகள் மூலமாக செயலிகளை பதிவிறக்கம் செய்து அபராதத்தை செலுத்தலாம் எனக்கூறி தற்போது புதுவிதமாக மோசடியில் சைபர் மோசடி கும்பல் ஈடுபட்டு வருகிறது.
பொதுவாக போக்குவரத்துக் காவல் துறையினர், ஆர்டிஓ மூலம் அனுப்பப்படும். இ-சலான்களில் echallan.parivahan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியே இடம் பெற்றிருக்கும். ஆனால் அங்கீகரிக்கப்படாத செயலிகள் பதிவிறக்க லிங்குகளை இணைத்து காவல்துறை அனுப்புவது போல் போலியாக குறுஞ்செய்திகளை வாகன ஓட்டிகளுக்கு அனுப்பி மோசடி கும்பல் பணம் கொள்ளையடிக்கின்றனர்.
இந்த குறுஞ்செய்தியில் வரும் லிங்கை கிளிக் செய்து செயலியை பதிவிறக்கம் செய்தவுடன் மொபைல் போனை கட்டுப்பாட்டில் எடுத்து விடுகின்றனர். அதன்பின் செயலியில் உள்ளது போன்று வாகன ஓட்டிகள் தங்களது முழு தகவல்களையும், அபராதம் செலுத்த வங்கி கணக்குகள் பற்றிய தகவல்களையும் பதிவு செய்து நிலுவையில் இருக்கும் அபராத தொகையை செலுத்துகின்றனர். ஆனால் அபராத தொகை செலுத்துவதற்கான பணப்பரிவர்த்தனை தோல்வி அடைந்து விட்டதாக வாகன ஓட்டிகளுக்கு காண்பிக்கும் வகையில் செயலிகளை வடிவமைத்துள்ளனர்.
இந்த லிங்குகளை தொட்டவுடன் செல்போனில் மென்பொருட்களில் ஊடுருவி சைபர் கிரைம் கும்பல் போனை கட்டுப்பாட்டில் எடுத்து விடுகின்றன. குறிப்பாக போக்குவரத்து அபராதத்தை செலுத்துவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்து சில அனுமதிகளை கொடுக்கும் பொழுது செல்போனில் உள்ள நம்பர்கள், போட்டோக்கள் உள்ளிட்ட அனைத்தையும் திருடி விடுகின்றனர். அதன் பின் டெலிபாட் (telebot) மூலமாக மொத்த தகவல்களையும், கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட செல்போனிலிருந்து சைபர் கும்பல் எடுத்து விடுகின்றனர்.
Telebot மூலமாக அடிப்படையாக வைத்து வங்கியில் இருந்து பணத்தை திருடுதல் உள்ளிட்டவற்றை சைபர் கும்பல் மேற்கொள்கிறது. மேலும் செல்போனில் உள்ள காண்டாக்ட் அனைத்தையும் திருடி அந்த எண்களுக்கு மீண்டும் லிங்குகளை அனுப்பி மோசடி செய்வதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக முடக்கிய செல்போன் நம்பரின் உரிமையாளர் பெயரை பயன்படுத்தி குறுஞ்செய்திகள் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பாக அவரது வீடியோ ஒன்று இருப்பதாகவும் அதில் இருப்பது நீங்களா என்ற கேள்வியுடன் குறுஞ்செய்தியானது பலருக்கு செல்கிறது. அந்த குறுஞ்செய்தியை யாரேனும் கிளிக் செய்யும் போது மீண்டும் சைபர் கும்பல் தங்கள் கைவரிசையை காட்டி தகவல்களை தொழில்நுட்ப ரீதியாக திருட ஆரம்பிக்கின்றனர். கிடைக்கும் வங்கி தகவல்களை வைத்து பணம் திருடவும் ஆரம்பிப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இது போன்று சைபர் கிரைமில் இருந்து தப்பிக்க போக்குவரத்து அபராதங்கள் தொடர்பாக குறுஞ்செய்தி வரும் பொழுது நன்கு ஆய்வு செய்து காவல்துறை ஆலோசனை பெற்று அபராதங்களை செலுத்துமாறு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக மூன்றாம் தர வகையிலான ஏபிகே என்ற லிங்குகள் மூலமாக காவல்துறை தரப்பில் எந்த செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய காவல்துறை அறிவுறுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன்களில் ஆன்டிவைரஸ் மென்பொருட்களை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்கலாம் எனவும் சைபர் கிரைம் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.