கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தில், தன்னை பற்றி அவதூறு பரப்பி வரும் பிரேமா மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தனியார் மருத்துவர் ஜேக்கலின் மோசஸ் புகார் அளித்துள்ளார்.
சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த நவம்பர் 13 ஆம் தேதி காலை 10:30 மணியளவில் முதல் தளத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவ துறை தலைவர் மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் கழுத்து, முதுகு, தோள்பட்டை என ஏழு இடங்களில் கத்தியால் குத்தினார். சிகிச்சைக்கு பிறகு மருத்துவர் பாலாஜி குணமடைந்து வருகிறார்.
கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி சரியாக மருத்துவ சிகிச்சை அளிக்காததால் பிரேமாவிற்கு உடல்நிலை மோசமானதாக தான் தெரிவித்ததாக தவறாக கருத்து தெரிவித்து வருவதாக பிரேமா மற்றும் அவரது மகன் லோகேஷ் மீது புகார் அளித்துள்ளார்.
மேலும் தன்னிடம் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைக்கு மூன்று முறை அணுகி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தான் அறிவுறுத்தியதின் பேரில் தான் கலைஞரின் நூற்றாண்டு மருத்துவமனைக்கு பிரேமா சிகிச்சைக்கு சென்றதாகவும் புகாரில் மருத்துவர் ஜேக்கலின் தெரிவித்துள்ளார்.
இதனால் தன்னைப் பற்றி அவதூறாக பரப்பி வரும் பிரேமா மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அரசு மருத்துவர் பாலாஜி தன்னுடைய தாய்க்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்று தனியார் மருத்துவர் கூறியதால் தான் விக்னேஷ் கொலை செய்ய முயன்றதாக வாக்குமூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரத்தில், விக்னேஷ்வரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.