Devara Pre Release Event : தேவரா ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் கேன்சல்... சம்பவம் செய்த ரசிகர்கள்... மன்னிப்பு கேட்ட ஜூனியர் NTR!

Devara Pre Release Event Cancelled : ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள தேவரா படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதனிடையே இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் திடீரென ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள் தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sep 23, 2024 - 11:18
Sep 23, 2024 - 13:00
 0
Devara Pre Release Event : தேவரா ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் கேன்சல்... சம்பவம் செய்த ரசிகர்கள்... மன்னிப்பு கேட்ட ஜூனியர் NTR!
ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட ஜூனியர் என்.டி.ஆர்

Devara Pre Release Event Cancelled : தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கொரட்டலா சிவா இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். இவர்களுடன் சயிப் அலிகான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சாக்கோ, கலையரசன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் ஜூனியர் என்டிஆருடன் ராம் சரணும் நடித்திருந்தார். அதேபோல், இப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதையும் வென்று அசத்தியது.

ஆர்.ஆர்.ஆர் வெற்றிக்குப் பின்னர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா படத்துக்கு டோலிவுட் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனால் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற தேவரா ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர், அனிருத் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து மும்பை பறந்த படக்குழு, நேற்று ஐதராபாத்தில் ரசிகர்களை சந்திக்க இருந்தது. இதற்காக படக்குழு சார்பில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.   

ஆனால், நேற்று மாலை நடைபெறவிருந்த தேவரா ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட்டுகள் வாங்கி காத்திருந்தனர். அதேபோல், ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் ஆகியோரும் இந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்தனர். ஆனால் நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அரங்கத்திற்குள் நுழைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் டிக்கெட் வாங்கி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பலருக்கும் இருக்கைகள் கிடைக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியிலும் இப்படியான சம்பவம் நடந்தது. அதேபோல் தேவரா பட நிகழ்ச்சியிலும் சில குளறுபடிகள் நடக்க, பொறுமையிழந்த ரசிகர்கள் அங்கிருந்த இருக்கைகளை அடித்து நெறுக்கிவிட்டனர். இதனால் குடும்பத்துடன் வந்திருந்த ரசிகர்கள் பலரும் அங்கிருந்து வெளியேற ரொம்பவே சிரமப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் காரணமாகவே தேவரா ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். 

இந்நிலையில், தேவரா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு ஜூனியர் என்டிஆர் உட்பட படக்குழுவினர் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேடுள்ளனர். முக்கியமாக ஜூனியர் என்டிஆர் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார். தேவரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வுக்காக, உங்களைப் போலவே நாங்களும் இந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தோம். ஏனெனில், நாங்கள் பல ஆண்டுகளாக இந்த படத்திற்காக கடின உழைப்பைக் கொடுத்துள்ளோம். பல சவால்களை எதிர்கொண்டு இப்படத்தை முடித்துள்ளதால், இதை பெரிய அளவில் கொண்டாட விரும்பினோம். குறிப்பாக 6 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் அன்புக்குரிய மாஸ் ஹீரோ ஜூனியர் என்டிஆரின் படம் சோலோ ரிலீஸாக வெளியாகிறது. 

கணேஷ் நிமர்ஜனத்திற்கு மிக அருகில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வை திட்டமிட்டோம். இதுபோன்ற பெரிய அளவிலான நிகழ்வுகளுக்கு பொதுவாக குறைந்தது ஒரு வாரமாவது முன் தயாரிப்பு தேவைப்படும். ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையும் எங்களுக்கு பல சவால்களை உருவாக்கியுள்ளது. இன்று மழை பெய்யாவிட்டாலும் கூட, நிகழ்வு நடக்க சாதகமான சூழல் இல்லை என்பதே உண்மை. மேலும், ரசிகர்களின் கூட்டமும் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கனத்த மனதோடு இந்த நிகழ்வை ரத்து செய்யும் முடிவு எடுத்துள்ளோம். உங்களில் பலர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணம் செய்து உங்கள் ஹீரோவை பார்க்கவும் கொண்டாடவும் வந்திருப்பீர்கள். நீங்கள் அனைவரும் பத்திரமாக வீடு திரும்பியிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்கள் சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறோம். உங்கள் புரிதலுக்கும் ஆதரவிற்கும் நன்றி என தெரிவித்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow