புயல் உருவாவதில் மேலும் தாமதம்... ஒரே இடத்தில் நிற்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Nov 28, 2024 - 19:40
 0
புயல் உருவாவதில் மேலும் தாமதம்... ஒரே இடத்தில் நிற்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
புயல் உருவாவதில் மேலும் தாமதம்... ஒரே இடத்தில் நிற்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து இலங்கை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளையொட்டி நிலை கொண்டு இருந்தது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முற்பகலில் புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது.

இது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 320 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையிலிருந்து கிழக்கு வட கிழக்கு திசையில் 100 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக் கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில்  புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வடக்கு தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்தில் காற்று வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 2-ந் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழ்நாட்டில்சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. 

மேலும் புயல் எச்சரிக்கை காரணமாக,  இன்று (நவ. 28) தமிழக கடலோர மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்திலும், நாளையும், நாளை மறுதினமும் வட தமிழக கடலோரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலான வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow