சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூன் கடந்த 1995ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசார் விசாரணக்கு அழைத்து செல்லபட்டார். அதன்பிறகு அவரை காணவில்லை. இதற்கிடையில் தர்மபுரி நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக நிலுவையில் இருத்த வழக்கில் அவர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டது.
இந்நிலையில் தன்னுடைய தந்தையின் மரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதால் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி அர்ஜூனனின் மகன் சதிஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 30 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜுனனின் மரணம் குறித்து விசாரிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அர்ஜூனனின் மகன் சதிஷ்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மற்றும் கே. ராஜசேகர் அமர்வு, காவல் துறையினரின் சித்ரவதை காரணமாக தான் அர்ஜுனன் இறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், எந்த விசாரணையும் நடத்தப்படாத நிலையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க இயலாது என்பதால் தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தது.
அதேசமயம், உரிய ஆதாரங்களை சேகரித்து, உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என மனுதாரருக்கு அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.