தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் சைபர் கிரைம் மோசடிகள்.. 36 பேர் கைது!
சைபர் கிரைம் மற்றும் அது சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 36 குற்றவாளிகளை CBCID காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் இக்காலத்தில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளிநாட்டில் வேலை தேடும் படித்த இளைஞர்கள். சட்டவிரோத ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மூலமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, லாவோஸ் மற்றும் மியான்மார் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அனுப்பப்படுகின்றனர். அங்கு அவர்கள் மோசடிகாரர்களிடம் சிக்கி இணைய மோசடி செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் போலியான சமூக ஊடகங்கள் மூலம் அப்பாவி பொதுமக்களை தொடர்பு கொண்டு, பிட் காயின் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் போன்ற போலியான செயலிகளில் முதலீடு செய்ய வைக்கின்றனர். அவர்கள் இணைய மோசடி செய்ய ஒத்துழைக்க மறுத்தால் அவர்களை உடல் அளவிலும் மனதளவிலும் துன்புறுத்துகின்றனர்.
கனம் தமிழ்நாடு காவல்துறை இயக்குநரின் உத்தரவின்படி, குற்ற பிரிவு குற்ற புலனாய்வு துறை (CBCID) சைபர் கிரைம் குறித்த புகார்களில் வழக்குகள் பதிவு செய்து தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தஞ்சாவூர் மற்றும் திருச்சி சரகங்களில் பதியப்பட்ட 7 வழக்குகள் உட்பட மாநிலம் முழுவதும் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையில் பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரின்பேரில் சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் மீது பெரும்பாலும் சட்டப்பிரிவுகள் 120(B) 368, 371 374 & 420, இந்திய தண்டனைச்சட்டம் உ/ இ பிரிவு 10 & 24, குடியேற்றச் சட்டம் 1983 (Emigration Act 1983). ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறையில் பதிவு செய்யப்பட்ட இரண்டு சைபர் கிரைம் வழக்குகளில் (1) சிவகங்கையைச் சேர்ந்த முருகன் த/பெ பெரியசாமி மற்றும் (2) தஞ்சாவூரைச் சேர்ந்த சுந்தராஜூலு த/பெ வாசுதேவன் ஆகியோர் 7 நபர்களை தமிழ்நாட்டில் இருந்து கம்போடியாவிற்கு சைபர் குற்றம்புரிய சட்டவிரோதமாக அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் திருவாரூர் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறையில் பதிவு செய்யப்பட்ட சைபர் கிரைம் வழக்கில் (1) திருச்சியைச் சேர்ந்த ரஹமத் நிஷா நிரஞ்சனா க/பெ. விஜயகுமார் (2) நாகர்கோவிலைச் சேர்ந்த சிவா @ சிவக்குமார் த/பெ. நடேசன் (3) சென்னையைச் சேர்ந்த ரெங்கநாதன் @ அரவிந்த், த/பெ. ரவிசங்கர் (4 மயிலாடுதுறையைச் சேர்ந்த கண்ணதாசன் த/பெ. காசிநாதன் (5) ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாத்தையா த/பெ சுந்தரராசு ஆகியோர் நாடு முழுவதுலிருந்தும் 91 நபர்களை கூட்டு சதி செய்து கம்போடியாவிற்கு சைபர் குற்றம்புரிய அனுப்பியதற்காகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நாகப்பட்டினம் சி.பி.சி.ஐ.டியில் பதிவுசெய்யப்பட்ட சைபர் கிரைம் வழக்கில் தேனியைச் சேர்ந்த மூன்று சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் (1) சரவணக்குமார் த/பெ. பாலசுப்ரமணி (2) சரவணகுமாரின் சகோதரர் சாந்தகுமார், (3) மகேஸ்வரன் த.பெ. கலைசெல்வன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சரகத்தில் புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 3 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. அரியலூரில் பதிவு செய்யப்பட்ட சைபர் கிரைம் வழக்குகளில் (1) திருவள்ளூரைச் சேர்ந்த நித்திஷ்குமார் நித்யகுமார் த/பெ. தங்கராஜ் (2) திருச்சியைச் சேர்ந்த ஹாஜி @ ஹாஜி முகமது த/பெ.ஹனிபா ஆகிய இரண்டு சட்ட விரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை தஞ்சாவூர் மற்றும் திருச்சி சிபிசிஐடி சரகங்களில், 12 சட்டவிரோத முகவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம், இன்றைய தேதியில் குற்றப் பிரிவு குற்ற புலனாய்வு துறையில் (CBCID) சைபர் கிரைம் மற்றும் அது சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யபட்டு, 36 குற்றவாளிகள் (6 மலேசிய நாட்டினர் உட்பட) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
What's Your Reaction?