கடந்த 1997 முதல் 2000–ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், மத்திய அரசிடம் இருந்தும், ரிசர்வ் வங்கியிடம் இருந்தும் அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் இருந்து, 1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508 ரூபாயை சட்டவிரோதமாக பெற்றதாக, மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.ஹைதர்அலி மற்றும் எச்.சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக் மற்றும் நல்ல முகமது களஞ்சியம் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை 6–வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து, ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தும் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், ரம்ஜான் நோன்பு காலம் நடந்து வருவதால் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தீர்ப்பை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.