தமிழ்நாடு

சிவில் வழக்கு: விதிகளை பின்பற்ற காவல்துறைக்கு உத்தரவு

சொத்து தொடர்பான சிவில் பிரச்சினை வழக்குகளை கையாளும் போது ஏற்கனவே உள்ள  விதிகளை  முறையாக பின்பற்ற வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவில் வழக்கு: விதிகளை  பின்பற்ற காவல்துறைக்கு உத்தரவு
சிவில் வழக்கு: விதிகளை பின்பற்ற காவல்துறைக்கு உத்தரவு

சென்னை மயிலாப்பூரில் நூர் ஜகான் பீவி, ஷேக் மாதர், அப்துல் ஹாசன் ஆகியோருக்கு சொந்தமான 3 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, விலைக்கு வாங்க கமலேஷ் சந்திரசேகர் என்பவர் ஒப்பந்தம் செய்திருந்தார்.  

மீட்கப்பட்ட நிலத்தை, தனக்கு விற்காமல், வேறு ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு விற்க உரிமையாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறி, நிலத்தை வேறு யாருக்கு விற்ககூடாது என தடை விதிக்க கோரி  சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, கமலேஷ் சந்திரசேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரித்தார். விசாரணையின் போது, மனுதாரருக்காக ஆஜரான வழக்கறிஞர், எதிர்மனுதாரர்களுக்காகவும் ஆஜரானவர் என்றும், சட்டப்படிப்பை படிக்காதவர் சட்ட நிறுவனம் நடத்தி, நிலப்பிரச்னை, குடும்ப பிரச்னை உள்ளிட்ட  வழக்குகளில் தீர்வு பெற்றுத் தருவதாக, நோக்ரி.காம், லிங்க்ட் இன் போன்ற இணையதளங்களில் விளம்பரங்கள் வெளியிட்டு வருவதாகவும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி, வழக்கறிஞர்கள், விளம்பரங்கள் வெளியிடக் கூடாது. எந்த நிறுவனமும் தங்கள் பெயரை பயன்படுத்த அனுமதிக்க கூடாது எனச் சுட்டிக்காட்டி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நில விவகாரங்களில் படித்தவர்களையே ஏமாற்றும் நிலையில், பாமர மக்களின் நிலையை சிந்தித்து பார்க்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, வழக்கறிஞர் தொழில் உன்னதமான தொழில்,  வர்த்தக தொழில் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலப்பிரச்னை தொடர்பாக பதிவு செய்யப்பட்டு, மத்திய குற்றப்பிரிவு வசம் உள்ள வழக்குகளை சிபிசிஐடி துணை ஆணையர் அந்தஸ்து அதிகாரி தலைமையில் சிறப்பு குழு  அமைத்து விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் நடந்த நிதி பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்து விசாரித்து, குற்றம் நடந்துள்ளதற்கு ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

சொத்து தொடர்பான சிவில் பிரச்சினை வழக்குகளை கையாளும் போது ஏற்கனவே உள்ள  விதிகளை  முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக போலீசார்ருக்கு நீதிபதி உத்தரவிட்டடுள்ளார்.