காவல் நிலையத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து...விசாரணையின்போது மைத்துனர் வெறிச்செயல்
கணவன்-மனைவிக்கு இடையே நடைபெற்ற குடும்ப தகராறில் விசாரணைக்கு வந்த மாமாவை காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்திய மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆவடி காமராஜ் நகரை சேர்ந்தவர் குரு சத்யா(32). கார் ஓட்டுனரான இவருக்கு திவ்யா(24) என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்து இருவரும் ஆவடி காமராஜ் நகரில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் குரு சத்யாவுக்கு வீட்டருகே வசிக்கும் வேறோரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் மனைவி திவ்யாவுக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து குருவிடம் கேட்டபோது அவர் முறையான பதில் அளிக்காமல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால், கணவரை பிரிந்து திவ்யா தனியாக வாசித்து வந்துள்ளார். மேலும், விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குரு சத்யா தினமும் திவ்யாவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட திவ்யா, நேற்று இது தொடர்பாக ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திவ்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் கணவர் குரு சத்யாவை நேற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியதன் பேரில், நேற்று மாலை ஆவடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
அப்போது திவ்யா தனது அண்ணன் மகேஷ்வரன் (28) என்பவருடன் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அவர்களிடம் உதவி ஆய்வாளர் கோகிலா விசாரணை நடத்தி கொண்டிருந்துள்ளார். அப்போது, திவ்யாவின் அண்ணன் மகேஷ்வரனுக்கும், திவ்யாவின் கணவர் குரு சத்யாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .
இதனால், ஆத்திரமடைந்த மகேஸ்வரன் தான் மறைந்து வைத்திருந்த கத்தியால், தன்னுடைய மாமா குரு சத்யாவை முதுகில் சரமாரியாக குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த குரு சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குருசத்யாவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனை அடுத்து போலீசார் காவல் நிலையத்தில் வைத்து அக்காவின் கணவரை கத்தியால் குத்திய மகேஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக விசாரணைக்கு சென்றபோது, காவல் நிலையத்திற்கு உள்ளேயே நடைபெற்ற இந்த கொலை வெறி தாக்குதல் சம்பவம், பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?