Annamalai on Sivaraman Death in Krishnagiri : கிருஷ்ணகிரியில் போலி என்சிசி கேம்ப் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் எலி மருந்து உண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.
சிவராமன் பாலியல் தொல்லை வழக்கில், தான் கைது செய்யப்படுவோம் என அறிந்து 16 மற்றும் 18ஆம் தேதி கைது செய்வதற்கு முன்பே எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை சிவராமனின் தந்தை அசோக்குமார் (61), மது அருந்திவிட்டு காவேரி பட்டினத்தில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, நடேசன் மருத்துவமனை எதிரே, இருசக்கர வாகனத்தில் தவறி கீழே விழுந்ததில் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் இவர் ஏற்கனவே இருந்ததாக தெரிவித்தனர். பெரும் பரபரப்பு ஏற்படுத்திய பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட சிவராமனின் தந்தையை நேற்று இரவு உயிரிழந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி சிவராமன் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சந்தேகம் கிளப்பியுள்ளார். இது குறித்து கூறியுள்ள அண்ணாமலை, “கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று காலை உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.
பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.