மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்துக்கான கல்வி நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுக தலைவர்களும், மாநில அரசுக்கு எதிராக பாஜக தலைவர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கல் சந்திப்பில், தமிழகத்திற்கு மோடி வந்தால் முதலில் "Go Back Modi" என்று கூறினோம். இனிமேல் "Get Out Modi" என்று கூறுவோம் என உதயநிதி பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், நீ சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லு பார்க்கலாம் என்று சவால் விடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, திமுகவினர், #GetOutModi என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் எக்ஸ் தளத்தில் டிரெண்ட் செய்த நிலையில், இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு '#GetOutStalin' என்ற டிரெண்டிங்கை தொடங்கி வைக்கவுள்ளதாக அறிவித்தார்..
அதன்படி அவர் சொன்னபடியே, இன்று காலை சரியாக 6 மணிக்கு தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் ஹேஷ்டேக் கெட் அவுட் ஸ்டாலினை (#GetOutStalin) பதிவு செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
#GetOutStalin என்ற ஹேஷ்டேகை பதிவு செய்து அவர் பகிர்ந்த ட்வீட்டில், “ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கரைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையம், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப் பொருள் மற்றும் கள்ளச் சாராயத்தின் புகலிடமாக மாற்றியது, கடனாளி மாநிலமாக்கியது, சிதிலமடைந்த கல்வித் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சமூகம், சாதி மதத்தை வைத்து பிரிவினைவாத அரசியல் செய்வது, மக்களுக்கு நல்லாட்சி வழங்கத் தவறியது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என்றிருக்கும் திமுக அரசை மக்கள் விரைவில் அப்புறப்படுத்துவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.