அரசியல்

விஜய்யின் அடுத்த இலக்கு டெல்லியா? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

By Sumalekha
16 Aug 2026, 02:00 PM
தமிழ்நாட்டில் விஜய்யின் அரசியல் செல்வாக்கை நாடு முழுவதும் கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் இருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என பேசியுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பயணம் மாநிலத்தைத் தாண்டி தேசிய அளவில் நகர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. தமிழகத்தில் விஜய்க்கு கிடைத்த வரவேற்பையும், அவரது அரசியல் அணுகுமுறையையும் நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்துகள் அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன.

விஜய்யை முன்னிறுத்தி வெவ்வேறு மொழிகளில் மாஸ் ரீல்ஸ்கள் தயாரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட அரசியல் வியூகங்களை நாடு முழுவதும் செயல்படுத்தினால், டெல்லி வரை அரசியல் பயணத்தை கொண்டு செல்ல முடியும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

இந்த சூழலில், சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தமிழகத்தில் இருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும். நம் குரல் சட்டமன்றத்தில் ஒலித்ததுபோலவே நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும்” என தெரிவித்தார். அவரது இந்த பேச்சு, விஜய்யை எதிர்கால பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சியாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் விஜய்யின் அரசியல் செல்வாக்கை தேசிய அளவில் விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் சமூக வலைதள பிரசாரங்களும் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இளைஞர்களை மையமாகக் கொண்டு பல்வேறு மொழிகளில் விஜய் தொடர்பான உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

எனினும், விஜய் தற்போதைக்கு தமிழ்நாட்டைத் தாண்டி தேசிய அரசியலுக்கு செல்லும் எண்ணத்தில் இல்லை என்றும், மாநில அரசியலில் தனது ஆட்சியை வலுப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் அவரது நலம்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால், ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கான முன்னோட்டமா அல்லது கட்சி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் கருத்தா என்ற விவாதம் தமிழக அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது. விஜய்யின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் தேசிய அரசியலை நோக்கி அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.