இந்துமதக் கோயில்களுக்கு சொந்தமான பல நூறு கோடி ரூபாய் சொத்துகளை கொள்ளையடித்தால் யார் கேட்கப் போகிறார்கள் என்ற அசட்டு தைரியத்தில் சமூகவிரோதிகள் போட்ட அடாவடி ஆட்டம் பழனியில் அம்பலமான நிலையில், அடுத்த பேரிடியாக ஸ்ரீரங்கத்தில் 50 கோடி ரூபாய் சொத்தை தி.மு.க. பிரமுகர் அபகரித்துவிட்டதாக எழுந்துள்ள புகார்தான் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் மூலம் திமுக பிரமுகர் அபகரித்துள்ளது தொடர்பான புகாரின் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் பேசினோம்.
'ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சொத்துகள் உள்ளன. கோயில் அருகே காந்தி ரோட்டில் உள்ள பழமையான கட்டிடம் 50 கோடி ரூபாய் மதிப்புடையது. 2022ம் ஆண்டு இந்தக் கட்டிடத்தை திருச்சி மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஆண்டாளின் கணவரும் ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளருமான ராம்குமார் சட்டவிரோதமாக தன் பெயருக்கு பத்திரப் பதிவு செய்திருக்கிறார்.
இந்தக் கட்டிடம் கோயிலுக்குச் சொந்தமான சொத்து என்பதற்கான அனைத்து ஆவணங்களும் இருக்கும் நிலையில், போலியாக ஆவணங்கள் தயாரித்து பத்திரப் பதிவு செய்திருக்கிறார். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட ராம்குமார், சென்னையைச் சேர்ந்த பத்மஜா, சௌந்தரராஜன், பெங்களூரைச் சேர்ந்த வித்யா, பாண்டிச்சேரியைச் சேர்ந்த வெங்கடவரதன், அப்போதைய ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் உட்பட ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம்.
தொடர் விசாரணையில் ராம்குமாரின் அடாவடிகள் ஒவ்வொன்றாக வெளியாகி அதிரவைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளராக இருக்கும் ராம்குமார், ஸ்ரீரங்கம் கோயிலையும் தன் கட்டுப்பாட்டிற்குள்தான் வைத்திருந்திருக்கிறார். கோயிலில் இவர் வைத்ததுதான் சட்டம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக தடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது வி.ஐ.பி. டோக்கன்களை பல ஆயிரம் ரூபாய்க்கு பிளாக்கில் விற்பனை செய்து லட்சக்கணக்கில் சுருட்டியிருக்கிறார்.
மேலும் முக்கிய திருவிழாக்களின்போது மண்டகப்படி நிர்ணயிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே உற்சவர் பெருமாள் செல்வது வழக்கம், ஆனால், அந்த வழிபாட்டு முறையை மீறி தனியார் ஒருவருக்காக அறநிலையத்துறை அதிகாரிகளை மிரட்டி உற்சவரை கொண்டுசென்று பக்தர்களின் சாபத்தையும் பெற்றிருக்கிறார். இதுபோன்று ஏராளமான புகார்களை ராம்குமாருக்கு எதிராக உள்ளூர் பக்தர்கள் கூறியிருக்கிறார்கள். கோயில் நிலம் மோசடி தொடர்பான புகாரில் ராம்குமாருடன் சம்பந்தப்பட்ட ஒருவர்கூட தப்பித்துவிடாத வகையில் விசாரணை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கோயில் சொத்தை அபகரித்தவர்கள் அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்" என்றார்கள்.
இந்த புகார்களுக்கு விளக்கம் பெற திமுக நிர்வாகி ராம்குமாரிடம் பேசினோம் 1903ம் ஆண்டு ரங்கசாமி அய்யங்கார் என்பவர். இந்த இடத்தை வாங்கியிருக்கிறார். அவருக்கு நான்கு வாரிசுகள். ஒருவர் ஜட்ஜ், மற்றொருவர் சயின்டிஸ்ட், மூன்றாவது நபர் லாயர். இன்னொருவர் தொழில்புரிகிறார். அவரின் நேரடி வாரிசுகளான இந்த நான்கு பேரும் ஒன்றாக வந்து பத்திரப் பதிவு செய்து கொடுத்த பின்புதான் நான் வாங்கினேன்.
இதில் எந்த தவறும் இல்லை. இப்போது இந்த இடம் பற்றிய வழக்கு விசாரணை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இருக்கிறது. வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது நீதிமன்றத்தை மதிக்காமல் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். எனக்கு எதிராக செயல்படுபவர்கள் சிலர் தி.மு.க.விலேயே இருக்கிறார்கள். அவர்கள் தூண்டுதலின் பேரில்கூட இது நடந்திருக்கலாம். இதுவரை காவல்துறையினர் என்னை அழைத்து விசாரிக்கவில்லை. அவர்கள் அழைத்தால் என்னிடம் இருக்கும் ஆவணங்களைக் கொடுப்பேன். நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருப்பதால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாது' என்றார்.
இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், "ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான இடம், மூலப் பத்திரம் ஏதுமில்லாமல், உண்மையான சர்வே எண்ணை மாற்றி போலி சர்வே எண் மூலம் போலி ஆவணம் தயார் செய்து பத்திரப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் கட்சி அலுவலகம் செயல்பட்டு இருக்கிறது. இதுபோல் தமிழகமெங்கும் கடந்த ஐந்தாண்டுகளில் தி.மு.கவினர் எங்கெல்லாம் நிலம் அல்லது கோயில் சொத்துகளை அபகரித்துள்ளார்கள் என்பதை அடையாளம் கண்டு வருகிறோம்.
முந்தைய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் ஒரு சாதாரண பகுதிச் செயலாளரால் இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்டிருக்க முடியாது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அவர்களை தப்பிக்கவே விடமாட்டோம்" என்றார்.
கோயில் நிலங்கள் என்று வகைப்படுத்தப்பட்டதை பத்திரப் பதிவு செய்யக்கூடாது என்று 2008ம் ஆண்டு கோயில் நிர்வாகம் தரப்பில் ஸ்ரீரங்கம் சார் பதிவாளருக்கு மனு அளிக்கப்பட்ட பிறகும். இந்த பத்திரப் பதிவு நடந்துள்ளது. இந்த மோசடி பற்றி தெரிந்த தனிநபர் ஒருவர், இந்த இடம் குறித்து ஆர்.டி.ஐ மூலம் தகவல் கேட்டு பெற்றதையடுத்தே இந்த மோசடி வெளியே வந்துள்ளது. அதன் பிறகே மாநகர குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது என்று அடையாளத்தை மறைத்துகொண்டு திருச்சி அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினார்கள். கோயில் சொத்துகளை கொள்ளையடிப்பவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை.