Manorathangal: கமல், மம்முட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில்... ஒரே படத்தில் இணைந்த மெகா கூட்டணி!

Manorathangal Trailer Released : கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில், நதியா, பார்வதி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள மனோரதங்கள் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Jul 16, 2024 - 22:15
Jul 16, 2024 - 23:51
 0
Manorathangal: கமல், மம்முட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில்... ஒரே படத்தில் இணைந்த மெகா கூட்டணி!
Manorathangal Trailer

சென்னை: கடந்த சில ஆண்டுகளாக மல்டி ஸ்டார்ஸ் படங்கள் அதிகமாக உருவாகின்றன. இந்தி, மலையாளம் மொழி படங்களில் முன்னனி ஹீரோக்கள் இணைந்து நடிப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், தமிழில் அப்படியான கூட்டணி அமைவதெல்லாம் ரொம்பவே அரிதிலும் அரிது. இந்த வழக்கமும் தற்போது அதிகம் மாறிவிட்டது எனலாம். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல்ஹாசன், விஜய், சீயான் விக்ரம், தனுஷ், சிம்பு ஆகியோரும் மல்டி ஸ்டார்ஸ் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், மலையாளத்தில் உருவாகியுள்ள மனோரதங்கள் படத்தில் பெரும் நட்சத்திரக் கூட்டணியே இணைந்துள்ளது.  

கேரள மக்களின் நாயகனான எழுத்தாளர் MT வாசுதேவன் நாயரை கொண்டாடும் வகையில், அவரின் கதைகள் தொகுத்து திரைப்படமாக உருவாகியுள்ளது. 9 குறுங்கதைகள் கொண்ட ஆந்தாலஜி திரைப்படமாக வெளியாகவுள்ள இதனை 8 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். அதன்படி, ஒல்லவும் தீரவும், ஷிலாலிகாதம் கதைகளை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். கடுகண்ணவ ஒரு யாத்திரை கதையை ரஞ்சித்தும், காட்சி என்ற கதையை ஷயாம்பிரசாத்தும் இயக்கியுள்ளனர். வில்பனா கதையை அஸ்வதி வி நாயரும், ஷெர்லாக் என்ற கதையை மகேஷ் நாராயணனும் இயக்கியுள்ளனர். அதேபோல், ஸ்வர்கம் துறக்குண சமயம் கதையை ஜெயராஜன் நாயர், அபயம் தீடி வேண்டும் கதையை சந்தோஷ் சிவன், கடல்காட்டு கதையை ரத்தீஷ் அம்பாட் ஆகியோரும் இயக்கியுள்ளனர். 

இந்த ஆந்தாலஜி சீரிஸில் இடம்பெற்றுள்ள 9 கதைகளையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். அதேபோல், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மெகா ஸ்டார் மம்முட்டி, ஃபஹத் பாசில், ஆசிப் அலி, பிஜு மேனன், ஹரீஷ் உத்தமன், சித்திக், பார்வதி, இந்திரஜித் சுகுமாரன், நதியா, அபர்ணா பாலமுரளி, மது, சித்திக், இந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள மனோரதங்கள் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரின் ஒவ்வொரு கட்டும் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. 

மனோரதங்கள் ஆந்தாலஜி சீரிஸ், ஆகஸ்ட் 15ம் தேதி நேரடியாக ZEE 5 ஓடிடியில் வெளியாகிறது. ஆந்தாலஜி சீரிஸ்ஸாக இருந்தாலும் மோகன்லால், மம்முட்டி, ஃபஹத் பாசில், பிஜூ மேனன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். முக்கியமாக எழுத்தாளர் MT வாசுதேவன் நாயருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக மலையாள முன்னணி ஹீரோக்கள் ஒன்றிணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow