தமிழ்நாடு 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய நல்லசாமி, வரும் ஜனவரி மாதம் 21ஆம் தேதி 'கள்' இறக்கி சந்தைப்படுத்தும், 'கள்' விடுதலை போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "இன்று இருக்கும் பலருக்கும் 'கள்' பற்றிய புரிதல் பலருக்கும் இல்லை. குறிப்பாக அண்ணாமலைக்கும் கூட இல்லை. பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உலகளவில் எந்த நாட்டிலும் 'கள்' தடையில்லாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் எதற்கு தடை போட வேண்டும்?
தமிழகத்தில் வெற்றிபெற்ற 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம் சட்டப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு பதவி ஏற்றுக் கொண்டனர். அதில் 47வது பிரிவு என்ன சொல்லி இருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்களா? 'கள்' தடை செய்யப்பட வேண்டிய ஒரு போதைப்பொருள் தான் என, அவர்கள் எங்களிடம் வாதாடி வெற்றி பெற்றுவிட்டால் அவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு தருகிறேன். வாதிட வாருங்கள்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததை வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் அண்ணா முதல் தற்போது உள்ள துணை முதல்வர் வரை அனைவரும் சினிமாவில் தொடர்புடையவர்கள் தான். யாரோ எழுதிய வசனத்தையும், பாடலையும் பாடி, வசனம் பேசியவர் விஜய். அவருக்கு அரசியல் அறிவு கிடையாது. அவர் ஆட்சிக்கு வரலாம், வராமலும் போகலாம்.
பெரியார் மதுவிற்கு ஆதரவாளரா, எதிர்ப்பாளரா என வாதாட தயார். நான் அவர் ஆதரவாளர் என்கிறேன். நீங்கள் எதிர்ப்பாளர் என்கிறீர்கள். கள் பற்றிய அறிவு ஒரு அரசியல் தலைவர்களுக்கும் இல்லை" என்று தெரிவித்தார்.