ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான ’கோமாளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இதையடுத்து வெளியான ‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் தற்போது உள்ள காதல் சூழல் போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த ‘லவ் டுடே’ பெரிய ஹிட் அடித்து பிரதீப் ரங்கநாதனுக்கு முன்னணி நடிகர் என்ற இடத்தை பெற்று தந்தது. சமீபத்தில் ’ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ‘டிராகன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கௌதம் மேனன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். கடந்த மாதம் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான ‘டிராகன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 37 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
விஜய் பாராட்டு
இந்நிலையில், ‘டிராகன்’ படக்குழுவினருக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜயை நேரில் சந்தித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் பிரதீப் ரங்கநாதன், “கலக்குறீங்க ப்ரோ.. இதை தளபதியிடம் இருந்து கேட்கும் போது நான் எப்படி உணர்ந்திருப்பேன்?
எனக்கு அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் அனைவராலும் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன். உங்கள் வாழ்த்திற்கும், நேரம் ஒதுக்கி எங்களை சந்தித்ததற்கும் நன்றி. சச்சின் ரீ ரிலீஸிற்காக காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2005-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சச்சின்’ திரைப்படம் ஏப்ரல் 18-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘ Kalakureenga Bro ‘ - How will i feel hearing this from Thalapathy . I know you all can understand how i would have felt .
— Pradeep Ranganathan (@pradeeponelife) March 24, 2025
Thankyou for the words and time sir .
Waiting for sachein re-release . pic.twitter.com/J7N3XsKOtU