நடிகைகள் குறித்து அவதூறு.. மருத்துவர் காந்தராஜ் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு!
சில நாட்களுக்கு முன்பு ஒரு யூ-டியூப் சேனலுக்கு பேட்டியளித்த மருத்துவர் காந்தராஜ், நடிகைகளை மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் மீது நடிகையும், விசாகா கமிட்டி தலைவருமான ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணையம் வழியாக புகார் அளித்தார்.
சென்னை: கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு தமிழ், மலையாள முன்னணி நடிகை ஒருவர் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதன்பின்பு மலையாள திரையுலகில் நடிகைகள் உள்பட அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ம் ஆண்டு கேரள அரசு கமிஷன் அமைத்தது.
நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தங்களது அறிக்கையை கேரள அரசிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் அதிரடியாக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். முன்னணி இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன், நடிகர்கள் ஜெயசூர்யா, ரியாஸ் கான், நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பல்வேறு நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார்களை கூறி வருகின்றனர். இதனால் புகார்களால் மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன் லால் உட்பட 17 உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாடு திரைத்துறையிலும் சில நடிகைகள் உள்ளிட்ட பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குற்றம்சாட்டப்பட்டது. ஒரு வாரத்துக்கு முன்பு சென்னையில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய நடிகை ரோகிணி, ''நடிகர் சங்க உறுப்பினர்களின் பாலியல் புகார் குறித்து விசாரிக்க நடிகர் சங்கம் சார்பில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர்கள், சட்ட ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் இருக்கிறார்கள். பெண் உறுப்பினர்களுக்கு கமிட்டியை தொடர்பு கொள்ள போன் நம்பர், இமெயில் ஐடி வழங்கப்படும். நடிகைகள் மீது அவதூறு பரப்புவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’’என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு ஒரு யூ-டியூப் சேனலுக்கு பேட்டியளித்த மருத்துவர் காந்தராஜ், நடிகைகளை மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்தே அட்ஜஸ்மெண்ட் விவகாரம் இருப்பதாகவும், காலம் தாழ்த்தி விட்டு இப்போது நடிகைகள் புகார் அளிப்பது ஏன்? எனவும் அவர் கூறியதாக தெரிகிறது. இந்த பேச்சு சமூகவலைத்தளத்தில் வைரலான நிலையில், மருத்துவர் காந்தராஜ் மீது நடிகையும், விசாகா கமிட்டி தலைவருமான ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணையம் வழியாக புகார் அளித்தார்.
இந்த புகாரின்பேரில் மருத்துவர் காந்தராஜ் உள்பட 2 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது இருவரின் மீதும் ஆபாசமாக பேசுதல், பெண்ணின் மாண்பை அவமதிக்கும் வகையில் பேசுதல், தனிநபரை அவமதித்தல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.
What's Your Reaction?