66 பேர் உயிரிழந்தும் திருந்தாத விக்கிரவாண்டி.. கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறையும்,புதுச்சேரி காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கள்ளச்சாராயத்தின் தீமை குறித்து மது குடிப்பவர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Jul 10, 2024 - 14:02
Jul 10, 2024 - 14:41
 0
66 பேர் உயிரிழந்தும் திருந்தாத விக்கிரவாண்டி.. கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி
Illict Liquor in Vikravandi

விழுப்புரம்: கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும்  கள்ளச்சாராய ஊறல்களை கண்டித்து பிடித்து அழித்து வரும் போலீசார், பலரை கைது செய்து வருகின்றனர். 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கஞ்சனூர் அருகே உள்ள பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் புதுச்சேரி மாநிலம் திருக்கனூரில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி வந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்துள்ளார். 

நேற்று காலை சாராயத்தை குடித்த சக்திவேல் உள்ளிட்ட 6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், காளிங்கராஜ், சுரேஷ்பாபு, ராஜா, பிரகாஷ், பிரபு உள்ளிட்ட 6 பேரையும் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்கு கள்ளச்சாராயத்தை குடித்த மேலும் 3 பேருக்கு இன்று உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களும் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இது தொடர்பாக விழுப்புரம் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அதே சட்டப்பேரவை தொகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. போலீசார் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி கள்ளச்சாராயத்தை ஒழித்தாலும், பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயத்தை கடத்தி வருவது அவர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. 

இதனால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறையும்,புதுச்சேரி  காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தினால் மட்டும் போதாது. கள்ளச்சாராயத்தின் தீமை குறித்து மது குடிப்பவர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow