தமிழ்நாடு

12th board exam: நாளை தொடக்கம்.. மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தேர்வுத்துறை

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

12th board exam: நாளை தொடக்கம்.. மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தேர்வுத்துறை
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவணையை சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி, 12-ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14-ஆம் தேதி முடிவடைகிறது. மேலும் பொதுத் தேர்வு மார்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 9-ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

இதேபோன்று, 11-ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 21-ஆம் தேதி முடிவடைகிறது. பொதுத் தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி மார்ச் 27-ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 19-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

10-ஆம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 28-ஆம் தேதி முடிவடைகிறது. பொதுத் தேர்வுகள் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதி முடிவடைகிறது.  பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 19-ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. 

இந்நிலையில், நாளை (மார்ச் 3) 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. இதற்காக தமிழகம், புதுச்சேரியில் மூன்றாயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வை  தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த ஏழாயிரத்து 518 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவியர்கள் எழுத உள்ளனர். 

இதில், 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவியர்களும், 145 சிறைவாசிகளும் உள்ளனர். தேர்வறை கண்காணிப்பு பணிக்காக 43 ஆயிரத்து 446 ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், நான்காயிரத்து 470 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வில் மாணவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவ, மாணவியர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் அடுத்த சில ஆண்டுகள் தேர்வு எழுத முடியாத வகையில் தண்டனைகளும் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.