Kumudam Exclusive : தேசிய மகளிர் ஆணைய பதவியை ராஜினாமா செய்தது ஏன்?.. குஷ்பு விளக்கம்!

Khushbu Sundar Resign in National Commission For Women : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக கடந்த ஜூலை மாத இறுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு அவர் ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தார். தற்போது குஷ்புவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 14, 2024 - 22:04
Aug 15, 2024 - 16:28
 0
Kumudam Exclusive : தேசிய மகளிர் ஆணைய பதவியை ராஜினாமா செய்தது ஏன்?.. குஷ்பு விளக்கம்!
Khushbu Sundar Resign in National Commission For Women

Khushbu Sundar Resign in National Commission For Women : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. நடிப்பில் இருந்து விடைபெற்ற பிறகு தீவிர அரசியலில் களம் இறங்கிய குஷ்பு, திமுகவுக்கு சென்றார். அதன்பிறகு திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். பின்பு அங்கு இருந்தும் விலகி பா.ஜ.கவில் ஐக்கியமானார். பாஜகவில் அவருக்கு செயற்குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது. 

பாஜகவில் தீவிரமாக பணியாற்றி வந்த குஷ்பு கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை கடைக்கோடி தொண்டர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். மேலும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்து வந்த அவர் பாஜகவின் பிரதான எதிரியான திமுக மீதும், தமிழ்நாடு அரசு மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். 

இதுதவிர தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விருப்ப பட்டியலிலும் குஷ்பு முன்னணியில் இருந்தார். இப்படி பாஜகவில் பம்பரமாக சுழன்று வந்த குஷ்புக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி தேடி வந்தது. அதாவது கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக கடந்த ஜூலை மாத இறுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு அவர் ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தார். தற்போது குஷ்புவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

ராஜினாமாவை தொடர்ந்து குஷ்பு பாஜக மீது விரக்தியில் உள்ளதாகவும், பாஜகவில் இருந்து விரைவில் விலக உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில், தேசிய மகளிர் ஆணைய பதவியை ராஜினாமா செய்தது ஏன்? என்பது குறித்து குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக நமது குமுதம் செய்தியாளர் குஷ்புவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''முழுநேர அரசியலில் பயணிப்பதற்காக தேசிய மகளிர் ஆணைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளேன்'' என்று குஷ்பு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய குஷ்பு, '' தேசிய மகளிர் ஆணைய பொறுப்பில் இருந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்னால் அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை. கட்சியின் நிகழ்ச்சிகளில் ஈடுபட முடியவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கமலாலயம் (பாஜகவின் அலுவலகம்) பக்கமே செல்லவில்லை. நான் ஒரு அரசியல்வாதி. அரசியல்தான் எனது லட்சியம்'' என்று தெரிவித்தார்.

பாஜகவில் இருந்து ஏதும் புதிய பொறுப்பு உங்களுக்கு வழங்கப்பட உள்ளதா? என குமுதம் செய்தியாளர் கேட்டபோது, அதற்கு பதில் அளித்த குஷ்பு, ''பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் எந்த பதவியையும் நான் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. கட்சிக்காக உழைப்பவர்கள்தான் பாஜகவில் இருக்கிறோம். வர வேண்டிய நேரத்தில் பொறுப்புகள் வரும்'' என்று கூறி முடித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow