தொடர்ந்து துரத்தும் கனமழை.. 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

Dec 1, 2024 - 10:36
Dec 1, 2024 - 10:37
 0
தொடர்ந்து துரத்தும் கனமழை.. 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் மெதுவாக நகர்ந்து கரையை கடந்துள்ளது. புதுச்சேரி அருகே நேற்று இரவு 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் புயல் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும்போது 70-80 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசியது. இதையடுத்து, ஃபெஞ்சல் புயல் மெதுவாக நகர்ந்து 6 மணிநேரத்தில் கரையை கடந்தது.

இன்று காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதிகனமழையும், 6 இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், கனமழையின் காரணமாக பிராட்வே, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அதிவேகமாக வீசிய காற்றால் சென்னை மெரினா உள்ள்ளிட்ட பகுதிகளில் புறக்காவல் நிலையம் சரிந்து விழுந்து சேதமடைந்தது. புளியந்தோப்பு, மூலக்கடை ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்த நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் படகு மூலம் மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து வெள்ளம் வடியாத இடங்களில் மோட்டார்களை கொண்டு மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 12 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்பட 12 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், நாகை உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow