நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. இந்த ஓராண்டில் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக முதல் மாநாட்டை நடத்தியது, முக்கிய பிரச்னைகளுக்கு கண்டனம் தெரிவித்தது, கூட்டணிகளில் கவனம் செலுத்துவது, களத்தில் மக்களை சந்திக்கத் தொடங்கியது, 234 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தை கட்சிரீதியாக 120 மாவட்டங்களாக பிரித்தது, 28 அணிகளை அறிவித்தது, பொதுக்குழு கூட்டம் மற்றும் ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்கு தயாராகி வருவது என அரசியல் களத்தில் தீவிரமாக இருந்து வருகிறார் தவெக தலைவர் விஜய்.
என்னதான் பார்த்து பாத்து பொறுமையாக அனைத்தையும் செய்துவந்தாலும், பல சர்ச்சைகள் தவெகவை சுற்றி நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நகரச் செயலாளர் பதவிக்கே 15 லட்சம் ரூபாய் கேட்பதாக எழுந்த பிரச்சனை, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற சமத்துவ கொள்கையை கொண்ட தவெகவில் சாதி பார்த்து பதவி கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டு என தவெகவும் சர்ச்சைகளும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் தான் மீண்டும் ஒரு சர்ச்சையில் விஜய்யும், தவெகவும் சிக்கியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக மாரியப்பன் என்பவர் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கட்சியின் புதிய மாவட்ட அலுவலக திறப்பு விழா தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் நடைபெற்றது. இதில் தவெக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்ட நிலையில், புதிய பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பெண்களுக்கு மரியாதை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. விழாவிற்கு கரிசல்குளம் பகுதியில் இருந்து வந்திருந்த பெண்கள், தங்கள் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி கட்சிக் கொடியை போராடி ஏற்றிவைத்தோம். ஆனால் நிகழ்ச்சிக்கு வந்த எங்களுக்கு ஒரு சால்வை கூட அணிவிக்காதது ஏன் என்று உரிமைக்குரல் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெண் தொண்டர்களை சமாதானம் செய்த தவெக மாவட்ட செயலாளர் இறுதியில் பெண்களுக்கும் சால்வை அணிவித்து ஒருவழியாக பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் மகளிருக்கு மரியாதை இல்லை என கூறப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்கு விஜய்க்கு தான் செல்லும் என்று பலரும் கூறிவரும் நிலையில், கட்சியிலேயே பெண்களுக்கு மரியாதை இல்லை என்ற பேச்சு த.வெ.க.-வுக்கு பின்னடைவாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த பிரச்சனைகளை குறித்து விசாரித்து, விஜய் சாட்டையை சுழற்றுவாரா என்பதே பலரது கேள்வியாக உள்ளது. .