சென்னை: தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கோட் திரைப்படம், செப். 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், யுவனின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் 4வது பாடலை நாளை வெளியிடுகிறது படக்குழு. விசில் போடு, சின்ன சின்ன கண்கள், ஸ்பார்க் என இதுவரை 3 பாடல்கள் கோட் படத்தில் இருந்து வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து நாளை (ஆக.31) வெளியாகும் கோட் 4வது பாடல், ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோட் 4வது சிங்கிள் குறித்து தற்போது வெளியான அப்டேட்டில், பாடலின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘மட்ட மஸ்தி ஆயா’ என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இப்பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார்; இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ”மச்சி கெடா மஞ்ச சட்ட... மம்டி வரான் பள்ளம் வெட்ட... மட்ட மட்ட ராஜ மட்ட... எங்க வந்து யாரு கிட்ட” என பாடல் வரிகளை ஷேர் செய்துள்ளார். அதோடு, இது இளைய தளபதி பிளாஸ்ட், ஆட்டநாயகனின் டான்ஸ் பார்க்க வெயிட்டிங் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இதன்மூலம் கோட் 4வது சிங்கிள், பக்கா குத்துப் பாடலாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல், இப்பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும், சேகர் மாஸ்டர் கோரியோகிராபி செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக இந்தப் பாடலில் விஜய்யும் த்ரிஷாவும் டான்ஸ் ஆடியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கோட் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெங்கட் பிரபு, கோட் படத்தில் த்ரிஷா கேமியோவாக நடித்துள்ளாரா என்ற கேள்விக்கு, இல்லை என்பதாக பதில் கூறியிருந்தார். ஆனால், கோட் 4வது பாடலில் விஜய்யும் த்ரிஷாவும் டான்ஸ் ஆடியுள்ளது கன்ஃபார்ம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க - ரஜினியின் கூலி படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்
இதனிடையே கோட் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள வெங்கட் பிரபு, இப்படத்தில் விஜய்யின் சின்ன வயது கேரக்டர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் என தெரிவித்துள்ளார். ஜூனியர் விஜய் வரும் காட்சிகளில் தியேட்டர் பிளாஸ்ட் கன்ஃபார்ம் என்றும், அவரது நடிப்பு எஸ்ஜே சூர்யா ஸ்டைலில் இருக்கும் எனவும் வெங்கட் பிரபு கூறியுள்ளார். இந்த அப்டேட் விஜய் ரசிகர்களுக்கு செம ஹைப் கொடுத்துள்ளது. முன்னதாக கோட் ட்ரெய்லரில் படத்தின் கதையை முழுவதுமாக சொல்லிவிட்டேன். ஆனால், அதனை யாருமே சரியாக டீ-கோடிங் செய்யவில்லை என வெங்கட் பிரபு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெங்களூரு, கேரளாவின் கொச்சி, திருவனந்தபுரம் நகரங்களில் கோட் படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கிவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில் கோட் படத்தின் சிறப்புக் காட்சி குறித்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கோட் இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில், நேற்று நடக்கவிருந்த பிரஸ் மீட்டும் கடைசி நேரத்தில் கேன்சல் ஆனது குறிப்பிடத்தக்கது.