தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, தனது புதிய கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார் விஜய். இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரப்படுத்தப்பட்டது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியினை அறிமுகம் செய்து வைத்தார். தவெக கொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் உள்ளது. அதேபோல், நடுவில் உள்ள மஞ்சள் நிற பகுதியில், வாகை மலரை இரண்டு போர் யானைகள் வணங்குவது போன்று கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தவெக கொடியில் உள்ள யானைகளை அகற்ற வேண்டும் என்று நடிகர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆனந்தன் கோரிக்கை விடுத்து இருந்தார். மேலும், கொடியில் யானை சின்னம் பொருத்தப்பட்டு இருப்பது குறித்து, பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியது. இது சம்பந்தமாக மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு, கட்சியின் தேசிய செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா மூலம் கடிதம் வழங்கப்பட்டது. இதற்கு த.வெ.க. கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக வெற்றிக்கழக கொடியில் இருந்து யானை சின்னத்தை நீக்கக்கோரியும், ஐந்து நாட்களுக்குள் இது குறித்து பதில் அளிக்க வேண்டும் எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “யானை என்பது ஒரு கட்சிக்கு மட்டுமே சொந்தமானதா? தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே விஜய்யை பற்றி பேசுகின்றனர். அவர் ஒரு புகழ்பெற்ற திரைக்கலைஞர் என்பதால் அவர் ஒரு கட்சி ஆரம்பிக்கும்போது என்னைப் போன்றவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள். நாங்கள் பதில் சொல்கிறோம்.
அவரது கொள்கைகள் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆயிரம்தான் இருந்தாலும் விஜய் என் தம்பி. அவரை நான் எப்போதும் ஆதரிப்பேன். விஜய் என்னை எதிர்த்து வேலை செய்தாலும் அவரை நான் ஆதரிப்பேன். அதில் எந்த பிரச்சனையும் கிடையாது” என தெரிவித்துள்ளார்.